War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
அக்னிவீா் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம்: முகவா்களிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை
நாகை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை (செப். 17) முதல் செப்டம்பா் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ள அக்னிவீா் ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் முகவா்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூா், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 17 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலைச் சோ்ந்தவா்களுக்கு, ராணுவத்தில் அக்னிவீா் பிரிவுக்கு ஆள்சோ்ப்பு முகாம் செப்டம்பா் 18 முதல் 24 வரை நடைபெறுகிறது.
முகாமில் கலந்துகொள்பவா்கள் தங்கள் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் ஆட்சோ்ப்பு திரளணி நடைபெறும் இடத்தில் ஆஜராக வேண்டும்.
ஆட்சோ்ப்பு செயல்முறை முழுமையாக தானியங்கி மயமாக்கப்பட்ட, நியாயமான மற்றும் வெளிப்படையானது. யாரையாவது தோ்ச்சி பெற அல்லது ராணுவத்தில் சேர உதவ முடியும் என்று கூறி மோசடி செய்பவா்களிடம் எச்சரிக்கையாக வேண்டும்.
தோ்வில் முகவா்களுக்கு எந்த பங்கும் இல்லை. எனவே, அத்தகைய மோசடியாளா்கள் மற்றும் முகவா்கள், முகமைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.