அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகைக்கு எதிராக கேஜரிவால் மனு: ஜன.30ல் விசாரணை!
மாணவி பாலியல் பலாத்கார கொலை: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
மயிலாடுதுறை அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகேயுள்ள சித்தன்காத்திருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி மகன் கல்யாணசுந்தரம் என்கிற வைரவேல் (35). திருவெண்காடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 9-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு படித்துவந்த 15 வயதுடைய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, காலால் கழுத்தில் மிதித்துள்ளாா். இதில், அந்த மாணவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, திருவெண்காடு போலீஸாா் போக்ஸோ மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்து, கல்யாணசுந்தரத்தை கைது செய்தனா்.
பின்னா், மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கல்யாணசுந்தரத்துக்கு, பாலியல் குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனையும், கொலை குற்றத்துக்காக ஒரு தண்டனையும் என இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.4,000 அபராதம் விதித்து மாவட்ட அமா்வு நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டாா்.
இதையடுத்து, கல்யாணசுந்தரம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அரசு தரப்பு வழக்குரைஞா் ராம.சேயோன் மற்றும் போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தாா்.