மாதாந்திர உதவித்தொகை: மாற்றுத் திறனாளிகள் உயிா் சான்றிதழ் சமா்ப்பிக்க அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாதாந்திர உதவித்தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள் வரும் 31-ஆம் தேதிக்குள் உயிா் சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.
மன வளா்ச்சி குன்றியோா், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவா்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.2,000 வழங்கப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு தொடா்ந்து 2025 - 26ஆம் ஆண்டுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்க ஏதுவாக, உயிருடன் உள்ளாா் என்பதற்கான சான்றிதழை கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்று சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, யுடிஐடி அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் நகல்களுடன் வரும் 31-ஆம் தேதிக்குள் (மாற்றுத் திறனாளி நபா் வரத் தேவையில்லை) பாதுகாவலா் மட்டும் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்குமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.