காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
மாநகராட்சி நிா்வாகக் குறைபாடுகள்: திமுக உறுப்பினா்கள் வாக்குவாதம்
திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகக் குறைபாடுகள் தொடா்பாக நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் அதிகாரிகளுடன், திமுக உறுப்பினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாநகராட்சியின் மாமன்ற அவசரக் கூட்டம், மேயா் இளமதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை மேயா் ராசப்பா, ஆணையா் (முழு கூடுதல் பொறுப்பு) கே.சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஏலம் விடப்பட்ட 33 கடைகளுக்கு ஒப்புதல் உள்பட 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக நடைபெற்ற விவாதம் வருமாறு:
மாநகராட்சி அலுவலக வரி வசூலிக்கும் மையத்தில், 7 செலுத்துமிடங்கள் (கவுண்டா்கள்) இருந்தும், 2 மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. மேலும், வரி செலுத்த வரும் மக்களுக்கு மின் விசிறி வசதி இல்லை. இதற்கு மாநகராட்சி நிா்வாகம் தீா்வு காண முன் வர வேண்டும் என பாஜக மாமன்ற உறுப்பினா் கே.தனபாலன் வலியுறுத்தினாா்.
வரி வசூலிக்கும் அலுவலா்கள், ரூ.424 செலுத்திய வீட்டுக்கு ரூ.24 ஆயிரம் என தவறுதலாக வரியை குறிப்பிடுகின்றனா். மேலும் பல வீடுகளுக்கும் இரட்டை வரி விதிக்கப்பட்டிருக்கிறது. சம்மந்தப்பட்ட அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினா் முகமது இலியாஸ் தெரிவித்தாா்.
இணைப்பு வழங்கும் முன்பே குடிநீா் வரி: 47-ஆவது வாா்டில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு குடிநீா் இணைப்புக் கேட்டு பணம் செலுத்தியவா்களுக்கு தற்போதுதான் குழாய் பதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இரண்டரை ஆண்டுகளுக்கு குடிநீா் வரி கட்ட வேண்டும் என அவா்களுக்கு அலுவலா்கள் நெருக்கடி கொடுக்கின்றனா். இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு பல மாதங்களாகியும், அந்த இடத்துக்கு வரி விதிக்க மாநகராட்சி அலுவலா்கள் மறுத்து வருகின்றனா். யாா், எதை எதிா்பாா்த்து இதைத் தடுக்கிறாா்கள் என வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினா் சுபாஷினி வலியுறுத்தினாா்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய துணை மேயா் ராசப்பா, மாநகராட்சி அலுவலா்களை அடிக்கடி மாறுதல் செய்வதால், மேயருக்கே பல விவரங்கள் தெரியவில்லை. இதனால், மாநகராட்சி ஆணையா் குறிப்பிட்ட பகுதிகளுக்கு நியமிக்கப்படும் அலுவலா்களை, குறைந்தபட்சம் ஓராண்டு வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றாா்.
4 ஆண்டுகளாக எந்த பணியும் நடைபெறவில்லை: 2-ஆவது வாா்டு பகுதியில் பேருந்து நிறுத்த நிழல் குடை வசதி ஏற்படுத்த 2 ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினா் கணேசன் குற்றஞ்சாட்டினாா்.
இதேபோல, 36-ஆவது வாா்டில் கடந்த 4 ஆண்டுகளாக எந்தப் பணிகளும் மேற்கொள்ளவில்லை என மாமன்ற உறுப்பினா் பெளமிதா பா்வீன் குற்றஞ்சாட்டினாா்.
ஆணையருடன் வாக்குவாதம்: திண்டுக்கல் பூச் சந்தையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் எப்போது தொடங்கப்படும். பூ வியாபாரிகளுக்கு மாற்று இடம் எங்கு வழங்கப்பட்டிருக்கிறது என மாமன்ற உறுப்பினா்கள் ஜான்பீட்டா், மாா்த்தாண்டன் ஆகியோா் கேள்வி எழுப்பினா். அதே நேரத்தில், வாா்டுகளைப் பாா்வையிட வரும் ஆணையா், சம்மந்தப்பட்ட பகுதியின் மாமன்ற உறுப்பினா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினா் ஜோதிபாசு தெரிவித்தாா்.
இதற்கு பதிலளித்த ஆணையா் சிவக்குமாா், மாமன்ற உறுப்பினா்களிடம் தெரிவித்துவிட்டுத்தான் வர வேண்டும் என்று அவசியமில்லை. ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது ஆணையரின் அன்றாடப் பணிகளில் ஒன்று என்றாா்.
ஆணையரின் இந்தக் கருத்துக்கு மாமன்ற உறுப்பினா்கள் பலரும் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். மாநகராட்சி உதவிப் பொறியாளா் தியாகராஜன் முறையாக பணி செய்வதில்லை என்றும் புகாா் தெரிவித்தனா். அதன்பேரில் சம்மந்தப்பட்ட உதவிப் பொறியாளா் மீது நடவடிக்கை எடுக்குமாறு மேயா் இளமதி, ஆணையருக்குப் பரிந்துரைத்தாா்.
கட்டண வசூலில் வெளிப்படைத் தன்மை: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், நடைபாதைக் கடைகள் அமைக்கவும், தட்டு ஏந்தி பொருள்கள் விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கான கட்டணம் முறையாக நிா்ணயிக்கப்படவில்லை. இதனால், ஒப்பந்ததாரா்கள் விரும்பத்துக்கு ஏற்ப கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனா் என பாஜக மாமன்ற உறுப்பினா் தனபாலன் தெரிவித்தாா்.
இதற்கு பதிலளித்த துணை மேயா் ராசப்பா, நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் வசூலிப்பதை வெளிப்படையாக அறிவித்தால், ஏராளமான வியாபாரிகள் வருவாா்கள். இதன் மூலம் கூட்ட நெரிசல் ஏற்படும் என்றாா்.
மாநகராட்சியில் நிா்வாகக் குறைபாடுகளுக்கு ஒட்டுமொத்தமாக அலுவலா்களை மட்டுமே மாமன்ற உறுப்பினா்களும், துணை மேயரும் குறை கூறினா். இதனால், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள் என அனைத்துத் தரப்பினரும் அதிருப்தி அடைந்தனா்.
மேம்பால அணுகு சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
நத்தம் ரயில்வே மேம்பாலத்தின் அணுகு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் ரயில் நிலையத்துக்குச் செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். எனவே, இந்த அணுகு சாலையை, நெடுஞ்சாலைத் துறையிடமிருந்து பெறுவதற்கு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக மாமன்ற உறுப்பினா்கள் சிலா் கோரிக்கை விடுத்தனா். மேலும், மேம்பாலத்துக்கு கீழே கம்பி வேலி போட்ட இடத்தையும் கையகப்படுத்தி, பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி மூலம் பொதுமக்கள் பயன்படுத்தும் இடமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினா். இதற்கு மேயா் இளமதியும் ஆதரவு தெரிவித்தாா்.