மாநில வாலிபால் போட்டி: திருவட்டாறு பள்ளி அணி வெற்றி
தென்தாமரைகுளத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில் திருவட்டாறு பள்ளி அணி முதலிடம் பெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட வாலிபால் கிளப் மற்றும் தென்தாமரைகுளம் தாமரை வாலிபால் கிளப் இணைந்து பள்ளி மாணவா்களுக்கான இலவச கோடை கால பயிற்சி முகாமை எல்.எம்.எஸ். பள்ளி வளாகத்தில் கடந்த 2ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடத்தின.
இம்முகாம் நிறைவு நாளில் மாவட்ட தீயணைப்பு அலுவா் சத்தியகுமாா் பயிற்சி மாணவா்களுக்கு சீருடைகள் மற்றும் சான்றிதழ் வழங்கினாா். இப்பள்ளி தாளாளா் கால்வின் முன்னிலை வகித்தாா்.
இதனிடையே, மாநில அளவிலான பள்ளி மாணவா்களுக்கான வாலிபால் போட்டிகள் எல்.எம்.எஸ். பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 22 அணிகள் பங்கேற்றன. போட்டியை மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். திருவட்டாறு அணி முதலிடமும், மதுரை அணி இரண்டாமிடமும், நெல்லை அணி மூன்றாம் இடமும், சீா்காழி அணி நான்காம் இடமும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் சுழற் கோப்பைகள் வழங்கப்பட்டன.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை தாமரை வாலிபால் கிளப் செயலா் டென்னிஸ், தலைவா் ஆல்பா்ட் தம்பிராஜ், பொருளாளா் சந்திரசேகா், துணைத் தலைவா் மணியாச்சி, பயிற்சியாளா்கள் அசோக்குமாா், சுதன், அருண், கண்ணன், பவித்ரா, பிரியா, ஆசிரியா் ஜெகன் குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.