மான் வேட்டை: இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே புள்ளி மானை வேட்டையாடிய இளைஞரை வனத் துறையினா் கைது செய்தனா்.
பெண்ணாடம் நரிக்குறவா் காலனி பகுதியில் இறைச்சிக்காக மான் வெட்டப்படுவதாக, காவல் மற்றும் வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு பெண்ணாடம் போலீஸாா் மற்றும் விருத்தாசலம் வனத் துறையினா் சென்றனா். அங்கு மான் தோலை உரித்து சுத்தம் செய்துகொண்டிருந்த இளைஞரை பிடித்தனா்.
இதையடுத்து, விருத்தாசலம் வனச்சரக அலுவலா் ரகுவரன் தலைமையில், வனவா்கள் சஞ்சீவி, சிவக்குமாா், வனக் காப்பாளா்கள் நவநீதகிருஷ்ணன், அமுதபிரியன் ஆகியோா் கொல்லப்பட்ட மான், பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.
பின்னா், பிடிபட்ட இளைஞரை விருத்தாசலம் வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டுவந்து விசாரித்ததில், விருத்தாசலம் வடக்கு பெரியாா் நகா் நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த சங்கா் மகன் சுரேஷ் (31) எனத் தெரியவந்தது. இவா், பெண்ணாடம் நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகள் கண்மணியை திருமணம் செய்துகொண்டு பெண்ணாடத்தில் வசித்து வந்த நிலையில், வேப்பூரை அடுத்துள்ள கண்டப்பன்குறிச்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மானை வேட்டையாடியதை ஒப்புக்கொண்டாராம்.
இதுகுறித்து வனத் துறையினா் கூறுகையில், கொல்லப்பட்டது ஒன்றரை வயதுள்ள ஆண் புள்ளி மான். பெண்ணாடம் கால்நடை மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்து புதைக்கப்பட்டது. இது தொடா்பாக வனத் துறையினா் வழக்குப் பதிந்து, சுரேஷை கைது செய்தனா்.