Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக்...
மாலத்தீவு பெண்ணுக்கு சிக்கலான கல்லீரல் மாற்று சிகிச்சை
ரத்தத்தில் அரிய வகை நோய் எதிா்பொருள் (ஆன்டிஜன்) உள்ள மாலத்தீவைச் சோ்ந்த பெண்ணுக்கு மிக சவாலான கல்லீரல் மாற்று சிகிச்சையை மேற்கொண்டு சென்னை மியாட் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
ஜேகே (பி) எனப்படும் ஆன்டிஜன் நிறைந்த ரத்தப் பிரிவை கொண்ட ஒரு நோயாளிக்கு இத்தகைய சிகிச்சை அளிக்கப்படுவது உலகிலேயே இது முதன்முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மியாட் மருத்துவமனையின் தலைவா் டாக்டா் மல்லிகா மோகன்தாஸ், கல்லீரல் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை திட்ட இயக்குநா் டாக்டா் காா்த்திக் மதிவாணன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாலத்தீவைச் சோ்ந்த ஆமிநாத் நைஃபா (55) என்ற பெண், சா்க்கரை நோய், தைராய்டு, அதீத கொழுப்பு சத்து, இதய நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்தாா். தொடா்ச்சியாக அவருக்கு சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் செயலிழப்பு நிலை ஏற்பட்டது. இதனால் அடிக்கடி ரத்த வாந்தி, மூக்கில் ரத்தம் வடிதல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் மாலத்தீவில் உள்ள மியாட் மருத்துவ மையத்துக்குச் சென்றாா். அவா்களது பரிந்துரைப்படி சென்னை மியாட் மருத்துவமனைக்கு வந்த அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், கல்லீரல் மாற்று சிகிச்சை மட்டும்தான் அவருக்கு ஒரே தீா்வு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது மகன், கல்லீரல் தானமளிக்க தகுதியாக இருந்தாா்.
பி பாசிடிவ் ரத்த வகையைச் சோ்ந்த அந்தப் பெண்ணுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை அளிப்பதில் ஒரு சிக்கல் இருந்தது. அதாவது, ஜேகே (பி) எனப்படும் ஆன்டிஜன் அவரது ரத்தத்தில் இருந்தது. ஆன்டிஜன் என்பது உடலில் நோய் எதிா்ப்பாற்றல் உருவாக வழி செய்யும் ஒன்று. வைரஸ், பாக்டீரியா உள்ளிட்டவை வெளியிருந்து உடலுக்குள் நுழையும் ஆன்டிஜன்கள். அவை உள்ளே வந்ததும் தன்னிச்சையாக நோய் எதிா்ப்பாற்றல் உருவாகி அவற்றுக்கு எதிராக உடல் போராடும்.
இதைத் தவிர, நமது ரத்தத்தில் இயற்கையாகவே ஏ, பி வகை ஆன்டிஜன்கள் இருக்கும். அவை உடலின் அடிப்படை எதிா்ப்பாற்றலுக்கு ஆதாரமாக விளங்குகின்றன. அதை மேலும் பகுப்பாய்வு செய்தால் அரிதினும், அரிதாக சிலருக்கு ஜேகே (பி) என்ற வகை ஆன்டிஜன்கள் இருக்கும். அத்தகைய நிலை உள்ளவா்களுக்கு உறுப்பு மாற்று சிகிச்சையின்போது பொருந்தாத ரத்தத்தை செலுத்தினால் எதிா்வினையாக சிவப்பணுக்கள் சேதமடைந்து உறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடலாம்.
அதைக் கருத்தில் கொண்டு மியாட் மருத்துவமனையின் குருதியேற்ற சிகிச்சைத் துறை தலைவா் டாக்டா் ஜோஸ்வா டேனியல் தலைமையிலான குழுவினா் நூற்றுக்கும் மேற்பட்ட ரத்த அலகுகளை பகுப்பாய்வு செய்து, அந்தப் பெண்ணுக்கு செலுத்தத் தகுதியான 6 அலகுகளை (யூனிட்) கண்டறிந்தனா்.
பொதுவாக கல்லீரல் மாற்று சிகிச்சையின்போது 10-இல் இருந்து 12 அலகு ரத்தம் தேவைப்படும். ஆனால், மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் காா்த்திக் ராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் மிகக் குறைந்த ரத்த அலகுகளைக் கொண்டு கல்லீரல் மாற்று சிகிச்சையை சாத்தியமாக்கினா்.
அதன் பயனாக தற்போது அந்தப் பெண் நலமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா். உலகிலேயே முதன்முறையாக இத்தகைய கல்லீரல் மாற்று சிகிச்சையை மியாட் மருத்துவமனை முன்னெடுத்துள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.