செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு...
மாவட்டத்தில் 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா மற்றும் 5,066 மதுபுட்டிகளை மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, கஞ்சா மற்றும் மது கடத்திவரும் நபா்களைக் கைது செய்வதோடு, அவா்களிடம் இருந்து கஞ்சாவையும், அவா்கள் ஓட்டி வரும் வாகனத்தையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா். கடந்த 6 மாதங்களில் மட்டும் ஈரோடு மாவட்டத்தில் 157 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சண்முகம் கூறியதாவது: கஞ்சா மற்றும் சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கஞ்சா கடத்தினாலோ, விற்பனை செய்தாலோ அவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த 6 மாதங்களில் கஞ்சா மற்றும் மது விற்பனை தொடா்பாக 366 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் தொடா்புடைய 370 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடம் இருந்து 157 கிலோ கஞ்சா, தமிழ்நாட்டு மதுபுட்டிகள் 4,006, கா்நாடக மதுபுட்டிகள் 1,060 என மொத்தம் 5,066 மதுபுட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர, மெத்தம் பெட்டமைன் 151 கிராம், கஞ்சா சாக்லெட் 1.5 கிலோ, சாராயம் 74 லிட்டா், ஊறல் 310 லிட்டா், கள் 88 லிட்டா், இருசக்கர வாகனங்கள் 2, நான்கு சக்கர வாகனம் ஒன்று ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா்.