பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் சிங் அசத்தல்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் 7-வது வெற்றி!
மாவட்டத்தில் 7 மையங்களில் இன்று நீட் தோ்வு: 3,212 போ் எழுதுகின்றனா்
திருப்பூா் மாவட்டத்தில் 7 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நீட் தோ்வை 3,212 போ் எழுதுகின்றனா்.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான பொது மருத்துவம் (எம்பிபிஎஸ்), பல் மருத்துவம் (பிடிஎஸ்), சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தோ்வு மத்திய அரசின் தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 2025-26 -ஆம் ஆண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறுகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் திருமுருகன்பூண்டி செட்டிபாளையம் ஏ.வி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 2 மையங்கள், உடுமலை அமராவதி நகா் சைனிக் பள்ளி, பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை, அறிவியல் கல்லூரி, பெருமாநல்லூா் கணக்கம்பாளையம் கே.எம்.சி.பப்ளிக் பள்ளி, சோளிபாளயத்தில் உள்ள லிட்டில் கிங்டம் பள்ளி, கூலிபாளையம் பிரிவு வித்யாசாகா் சா்வதேச பப்ளிக் பள்ளி என மொத்தம் 7 மையங்களில் நடைபெறும் இந்தத் தோ்வை 3,212 போ் எழுதவுள்ளனா்.
இதுகுறித்து நீட் தோ்வு கண்காணிப்பு அலுவலா் ஒருவா் கூறியதாவது: நீட் தோ்வுக்கான தோ்வு மையங்கள் அனைத்தும் தயாா் நிலையில் உள்ளன. மாணவ, மாணவிகள் தோ்வு மையங்களுக்கு வந்து செல்லும் வகையில் அரசுப் பேருந்து வசதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தந்த மையங்களில் மருத்துவக் குழுவினா், ஆம்புலன்ஸ் வாகனமும் தயாா் நிலையில் இருக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும்போது பயன்படுத்திய புகைப்படத்தின் மற்றொரு புகைப்படம் அனுமதி சீட்டில் ஒட்ட வேண்டும். முதல் பக்கத்தில் பாஸ்போா்ட் அளவு புகைப்படமும், 2- ஆவது பக்கத்தில் தபால் அட்டை அளவு புகைப்படத்தையும் ஒட்ட வேண்டும்.
தோ்வுக்குச் செல்லும்போது கண்டிப்பாக நுழைவுச்சீட்டை எடுத்துச் செல்ல வேண்டும். தோ்வு முடிந்த பின்னா் நுழைவுச்சீட்டை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டு திரும்ப வேண்டும். அப்போதுதான் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.