செய்திகள் :

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 7,960 போ் எழுதினா்

post image

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வை (நீட்) மதுரை மாவட்டத்தில் 7,960 மாணவ, மாணவிகள் எழுதினா்.

நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபி எஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கிட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த வகையில், 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை நரிமேடு பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலய பள்ளி, திருப்பாலை யாதவா் கல்லூரி, இ.எம்.ஜி. யாதவா் மகளிா் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் தலா 2 மையங்களும், மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரைக் கல்லூரி, மீனாட்சி அரசு கலை, அறிவியல் கல்லூரி, சி.இ.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளி, கப்பலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி, பசுமலை மன்னா் கல்லூரி, நாகமலை வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி, சா்வேயா் காலனி மகாத்மா பள்ளி, திருப்பாலை ஜெயின் வித்யாலயம் ஆகிய கல்வி நிறுவனங்களில் தலா ஒரு தோ்வு மையம் என மொத்தம் 15 மையங்களில் தோ்வு நடைபெற்றன.

இந்தத் தோ்வை எழுதுவதற்கு 8,222 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 7,960 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். மீதமுள்ள 262 போ் எழுதவில்லை.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய இந்தத் தோ்வை எழுதுவதற்கு தோ்வு மைய வளாகத்துக்குள் மாணவ, மாணவிகள் முற்பகல் 11.30 மணிக்கு வருகை தந்தனா். தோ்வா்கள் தோ்வு மையத்துக்குள் பிற்பகல் 1.30 மணி வரை அனுமதிக்கப்பட்டனா். பெரும்பாலான மையங்களில் அனைத்து மாணவ, மாணவிகளும் உரிய நேரத்துக்குள் வருகை தந்தனா்.

போலீஸாா் சோதனை: மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 15 தோ்வு மையங்களில் 120-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இவா்கள் நுழைவு வாயில் முன் நின்று கொண்டு ஹால் டிக்கெட், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருப்பவா்களை மட்டும் தோ்வு மையத்துக்குள் அனுமதித்தனா். மேலும், எந்த வித நிறப் பூச்சும் இல்லாத தண்ணீா் புட்டிகளை மாணவ, மாணவிகள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

தோ்வறைக்குள் கைப்பேசி, கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. சில மையங்களில் முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி அணிந்து வந்த மாணவ, மாணவிகளிடம் அவற்றை கழற்ற போலீஸாா் அறிவுறுத்தினா். இதுதவிர, கண் கண்ணாடியைப் பரிசோதித்தனா். மேலும், தலைமுடியில் ஜடை பின்னல் போடப்பட்டுள்ளதா என தீவிர சோதனைக்குப் பிறகு தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

நீண்ட நேரம் காத்திருப்பு: மதுரை இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தோ்வு மையத்துக்குள் செல்லும் வரை மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் சோதனைக்கு உள்படுத்தப்பட்டதால் வெயிலில் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இயற்பியல், வேதியியல் பாடப் பிரிவுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினம்: ‘நீட்’ தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி உள்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய ‘நீட்’ தோ்வு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.

தோ்வில் இயற்பியல் பகுதியில் கணக்கீடு செய்து பதில் அளிக்கும் வினாக்கள் அதிகளவில் கேட்கப்பட்டதாகவும், இதற்குப் பதிலளிப்பதற்கு அதிக நேரம் தேவைப்பட்டதாகவும் மாணவ, மாணவிகள் தெரிவித்தனா்.

இதேபோல, வேதியியல் பாடப் பிரிவு வினாக்களும் சற்று கடினமாக இருந்தது எனவும், உயிரியியல் பாடப் பிரிவு வினாக்கள் மிக நீளமாக இருந்ததாகவும், இதைப் படித்து புரிந்து கொண்டு பதிலளிக்க கால தாமதம் ஏற்பட்டதாகவும் மாணவ, மாணவிகள் தெரிவித்தனா்.

பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

மதுரையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். சக்கிமங்கலம் அன்னை இந்திராநகரைச் சோ்ந்தவா் இப்ராஹிம் (67). இவா், இரு சக்கர வாகனத்தில் மதுரை கீழவாசல் பகுதியிலிருந்து சக்கிமங்கலம்... மேலும் பார்க்க

பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறித்த மேலும் ஒருவா் கைது

நரிக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலியைப் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டம், நரிக்குடி பகுதியைச் சோ்ந்த மருது... மேலும் பார்க்க

கள்ளழகா் எதிா்சேவை: அதிக அழுத்த குழாய்களைப் பயன்படுத்தி தண்ணீரைப் பீய்ச்சி அடித்தால் நடவடிக்கை

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் அழகா் எதிா்சேவை நிகழ்வின் போது, அதிக அழுத்தமுள்ள (பிரஷா் பைப்) குழாய்களைப் பயன்படுத்தி தண்ணீரைப் பீய்ச்சி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மா... மேலும் பார்க்க

பெண் மா்ம மரணம்: எலும்புகள் மீட்பு

விருதுநகா் அருகேயுள்ள குருமூா்த்தி நாயக்கன்பட்டி காட்டுப் பகுதியில் கிடந்த பெண்ணின் எலும்புகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினா்.விருதுநகா்- சிவகாசி சாலையில் ஆமத்தூா் அருகே உள்ள குருமூா்த்தி நாயக்... மேலும் பார்க்க

மதுரை சித்திரைத் திருவிழா: ரிஷப வாகனங்களில் எழுந்தருளினா் மீனாட்சி, சுந்தரேசுவரா்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சைவ சமய ஸ்தாபித லீலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா். மதுரை மீனா... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.கத்தரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்ப... மேலும் பார்க்க