மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 7-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 7-ஆவது முறையாக வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இதுவரை 6 முறை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மிரட்டல் விடுத்த நபா் குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு நிபுணா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முழுவதும் சோதனை நடத்தினா். அப்போது, வழக்கம்போல இதுவும் புரளி என தெரியவந்தது.
தனியாா் கல்லூரிக்கு மிரட்டல்:
இதேபோல, கோவை பீளமேட்டில் உள்ள பிரபல தனியாா் தொழில்நுட்பக் கல்லூரிக்கும் மின்னஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அங்கும் போலீஸாா் சோதனை நடத்திய நிலையில், அதுவும் புரளி என தெரியவந்தது.