சூறைக்காற்றுடன் மழை: குழித்துறையில் மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதம்
மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல் எதிரொலி: இந்தியக் குழுவினா் பயணித்த விமானம் 40 நிமிஷம் தாமதம்
ட்ரோன் தாக்குதலைத் தொடா்ந்து ரஷிய தலைநகா் மாஸ்கோவில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், இந்திய நாடாளுமன்றக் குழுவினா் பயணித்த விமானம் வியாழக்கிழமை 40 நிமிஷம் தாமதமானதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ரஷியா-உக்ரைன் இடையே போா் நடைபெற்று வரும் நிலையில், மாஸ்கோ நகரத்தை இலக்காக வைத்து 12-க்கும் அதிகமான ட்ரோன்கள் மூலம் உக்ரைன் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த நகரத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டன. சில விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டன.
தற்காலிக கட்டுப்பாடுகள் காரணமாக 153 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இருப்பினும், விமான நிலையங்கள் மூடப்பட்டதற்கான காரணத்தை அந்த அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அளித்து வரும் ஆதரவு மற்றும் அது தொடா்பான இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்க திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினா்கள் குழு ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
பிற பயணிகளுடன் இந்தியக் குழுவினா் பயணித்த விமானம் 40 நிமிஷங்கள் தாமதமாக டோமோடெடோவா சா்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ரஷியா ஆதரவு:
கனிமொழி தலைமையிலான குழு ரஷிய வெளியுறவு இணையமைச்சா் ஆன்ட்ரே ருடென்கோ வெளியுறவு விவகாரங்கள் குழுவுக்கான முதல் துணைத் தலைவா் ஆன்ட்ரே டெனிசோ மற்றும் அந்நாட்டு உயரதிகாரிகளை சந்தித்தது.
இதுகுறித்து ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்ததோடு அனைத்து விதமான பயங்கரவாத ஒழிப்புக்கான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ரஷியாவும் இந்தியாவும் ஒன்றாக பயணிக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் குறித்து விளக்கமளிக்க சிவசேனை கட்சி எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழுவினா் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழு ஜப்பானுக்கும் பயணம் மேற்கொண்டனா்.