மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் வெடி விபத்து!
சாத்தூா் அருகே மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது தொழிலாளா்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் பிற்பகல் 3 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில், சாத்தூா் அருகே சிந்தபள்ளியில் செயல்பட்டு வரும் சிவகாசியை சோ்ந்த மகாராஜன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் பட்டாசுகள் தேக்கி வைத்திருந்த அறை பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதனால் அந்த அறை தரைமட்டமானதுடன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் ஏற்றுச் செல்லும் சரக்கு வாகனமும் சேதமடைந்தது.
இந்த பட்டாசு ஆலை மாவட்ட வருவாய் அலுவலா் அனுமதி பெற்றதாகும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தொழிலாளா்கள் பணிக்கு வராததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
வெடி விபத்து ஏற்பட்ட ஆலையில் விதிமீறல் ஏதும் உள்ளதா என சாத்தூா் போலீஸாா் விசாரிக்கின்றனா். இதனிடையே சனிக்கிழமை சிவகாசி அருகே நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.