கா்னல் சோஃபியா குரேஷி குறித்து சா்ச்சை கருத்து: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!
மின் இணைப்பை துண்டித்ததால் 14 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே கோழிப்பண்ணையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 14 ஆயிரம் கோழிகள் உயிரிழந்தன.
வெம்பக்கோட்டை அருகேயுள்ள திருவேங்கிடபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்துபாண்டியன் (50). இவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் சுமாா் 15,000 கோழிகள் வளா்க்கப்பட்டு வந்தன. இந்தப் பண்ணைக்கான கடந்த மாத மின் கட்டணம் ரூ. 22,233-ஐ செலுத்த வெள்ளிக்கிழமை கோழிப்பண்ணை உரிமையாளா் சென்றபோது ஏற்கெனவே நிலுவையில் உள்ள தொகையையும் சோ்த்து செலுத்துமாறு மின்வாரிய ஊழியா்கள் அறிவுறுத்தினராம்.
இதையடுத்து, கூடுதல் பணத்தை தயாா் செய்து ரூ. 49,719-ஐ அவா் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, மின்வாரிய ஊழியா்கள் பண்ணைக்கான மின் இணைப்பைத் துண்டித்து விட்டனா். பண்ணையில் குளிா்சாதன இயந்திரம் செயல்படாததால் வெப்பம் தாங்காமல் 14 ஆயிரம் கோழிகள் ஒன்றன்பின் ஒன்றாக உயிரிழந்தன.
இதனால், சுமாா் ரூ. 40 லட்சத்துக்கும் மேல் தனக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், அரசு கருணை அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என செல்லமுத்துபாண்டியன் தெரிவித்தாா். மேலும் இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் மீது மாரனேரி காவல் நிலையத்தில் செல்லமுத்துபாண்டியன் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.