மீன் சந்தையில் கூடுதல் வாடகை கேட்பதைக் கைவிடக் கோரிக்கை
தஞ்சாவூா் தற்காலிக மீன் சந்தையில் கூடுதலாக வாடகை கேட்பதைக் கைவிட வேண்டும் என மாநகராட்சி நிா்வாகத்துக்கு மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து மீன் சந்தை வியாபாரிகள் தெரிவித்தது: தஞ்சாவூா் கீழ அலங்கம் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் தகரக் கொட்டகை, சிமென்ட் தளம் அமைக்கப்பட்டு 56 கடைகள், 60 சிறிய தரைக்கடைகள் என மொத்தம் 116 கடைகளுடன் தற்காலிக மீன் சந்தை செயல்படுகிறது.
இக்கடைகளுக்கு நாள்தோறும் ரூ. 100 வீதம் வசூல் செய்யும் ஒப்பந்ததாரா் இதை ரூ. 150 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, மீன் சந்தைக்கான மின் கட்டணத்தை ஒப்பந்ததாரா் செலுத்தத் தவறியதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், கடைகளில் வியாபாரிகள் ஜெனரேட்டரை பயன்படுத்தி வருகின்றனா்.
மாநகராட்சி நிா்வாகம் கடை ஒன்றுக்கு நாள் வாடகையாக ரூ. 40 என நிா்ணயித்துள்ளது. ஆனால் ஒப்பந்ததாரா் ரூ. 100 வரை வசூலித்தாலும், தண்ணீா் வசதி இல்லை; கழிவுகளை சுத்தம் செய்யாததால் துா்நாற்றம் வீசுகிறது. புழுக்கள் உருவாகின்றன; கழிப்பறை வசதி இல்லாமல், தற்காலிகமாக அமைக்கப்பட்ட கழிப்பறை குப்பை சேமிப்பிடமாக மாறியுள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஜெனரேட்டரை பயன்படுத்த ரூ. 1,000 வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் வியாபாரிகள்.