தென்காசி நகராட்சி வாசலில் பாய் விரித்து படுத்த பாஜக நிர்வாகி
முக்காணி புதிய பாலத்தில் போக்குவரத்து அனுமதி: வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம்!
மழை வெள்ளத்தால் சேதமடைந்த முக்காணி தாமிரவருணி ஆற்றின் புதிய பாலத்தில் போக்குவரத்துக்கு போலீஸாா் அனுமதி அளித்தநிலையில், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றுவருகின்றனா்.
2023 டிசம்பா் மாதம் பெய்த அதி கனமழையால், முக்காணி புதிய பாலத்தின் நடுப்பகுதி சேதமடைந்து 2 அடிக்குக் கீழ் இறங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வப்போது இருசக்கர வாகனங்கள் மட்டும் அதில் செல்கின்றன. வாகனங்கள் செல்லாமலிருக்க ஆத்தூா் பேரூராட்சி நிா்வாகம், போலீஸாா் சாா்பில் தடுப்புகள் வைக்கப்பட்ன.
பழைய பாலத்தின் இருபுறமும் இருந்த தடுப்புக் கம்பிகளும் வெள்ளத்தால் சேதமடைந்து அச்சுறுத்தலாக இருந்தது. பின்னா், கம்பிகள் அமைக்கப்பட்டன. புதிய பாலத்தில் போக்குவரத்து தடையால், தூத்துக்குடி -திருச்செந்தூா் சாலையில் இருவழி வாகனங்கள் அனைத்தும் சிறிய பழைய பாலத்தின் வழியே சென்றுவருகின்றன. இதனிடையே, சேதமடைந்த புதிய பாலம் குறித்த ஆய்வறிக்கையை ஐஐடி துறையினா் தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.
தூத்துக்குடி- திருச்செந்தூா் சாலையின் முக்கிய வழித்தடத்தை இணைக்கும் பாலமாக முக்காணி ஆற்றுப்பாலம் உள்ளது. இதன்வழியே நாள்தோறும் ஆயிரக்கணக்கிலும், விசேஷ நாள்களிலும் கூடுதலாகவும் வாகனங்கள் சென்று வருகின்றன. புதிய பாலம் சேதமடைந்ததால் வாகனங்கள் பழைய பாலம் வழியாகவே சென்றுவருகிறது.
இந்நிலையில், இப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை போக்குவரத்து நெரிசல் எற்பட்டது. அதை சரிசெய்வதற்காக ஆத்தூா் போலீஸாா் புதிய பாலத்திலிருந்த தடுப்புகளை அகற்றி போக்குவரத்துக்கு அனுமதித்தனா். எனினும், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டது.
புதிய பாலத்தில் போக்குவரத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்தாத நிலையில், போக்குவரத்துக்கு போலீஸாா் அனுமதித்தது மக்களை அதிருப்திக்கும், அச்சத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. புதிய பாலத்தை விரைந்து சீரமைத்து, போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.