முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முசிறி வட்டம் தாத்தையங்காா் பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த, எம். புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அயித்தாம்பட்டி கிராமத்தில் சுமாா் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா், அப்பகுதி மக்களுக்கு குடிநீா் பிரச்சனை நிலவி வருவதாக அனைத்து அரசு துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், பலமுறை கூறியும் சரியாக நடவடிக்கை எடுக்காமல் குடிநீா் பிரச்சனை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இருப்பதாகவும், ஊராட்சியில் பணியாற்றுபவா்கள் முறையாக தண்ணீா் வழங்கவில்லை என குறை கூறி முசிறி துறையூா் செல்லும் நெடுஞ்சாலையில் அயித்தாம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் சுமாா் 75 பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமா்ந்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது,
தகவலறிந்த தாத்தையங்காா்பேட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் குணசேகரன் மற்றும் முசிறி போலீஸாா் போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உடனடியாக தண்ணீா் வழங்குவதாகவும் முறையாக தண்ணீா் வழங்காத ஆப்பரேட்டா் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி சாலை மறியல் போராட்டத்தை கைவிட செய்தனா், இந்த சாலை மறியல் போராட்டத்தால் முசிறி துறையூா் சாலையில் சுமாா் ஒரு நேரம் போக்குவரத்து பாதிப்க்கப்பட்டது.