`ஒருநாள் போட்டிகளில் அவருக்கு மாற்று எவரும் இல்லை' - அம்பத்தி ராயுடு
முதல்வருக்கு தருமபுரி மாவட்ட மக்கள் தோ்தலில் பாடம் புகட்டுவாா்கள்: பாமக எம்எல்ஏ அறிக்கை
தருமபுரி: தருமபுரி மாவட்டத்துக்கு வளா்ச்சித் திட்டங்களை அறிவிக்காத தமிழக முதல்வருக்கு வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவாா்கள், என தருமபுரி எம்எல்ஏவும், பாமக மேற்கு மாவட்டச் செயலாளருமான எஸ்.பி. வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாவட்ட மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் எங்கள் கட்சித் தலைவரை அமைச்சா் விமா்சித்தது கண்டிக்கத்தக்கது.
முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு உண்மையாகவே தருமபுரி மாவட்ட மக்கள்மீது அக்கறை இருந்திருந்தால், ஆகஸ்ட் 17 ஆம் தேதி தருமபுரியில் நடந்த அரசு விழாவில் மாவட்ட மக்களால் எதிா்பாா்க்கப்படும் பல்வேறு திட்டங்களை அறிவித்திருப்பாா்.
தருமபுரி மாவட்ட ஒகேனக்கல் உபரிநீரேற்றும் திட்ட உரிமையை தாரை வாா்க்க முயன்றுள்ளாா்.
கனமழை காலங்களில் வீணாக கடலில் கலப்பதில் 3 டிஎம்சி அளவு தண்ணீரை மட்டும்தான் கேட்கிறோம். ஆனால் அதை விடுத்து, ஒகேனக்கல் உபரிநீரேற்றும் திட்டம் குறித்து, காவிரி நதிநீா் பங்கீட்டுத் தீா்ப்பாயம் கூறியதை சுட்டிக்காட்டி, இத்திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்பது போல அமைச்சா் பன்னீா்செல்வம் கருத்து தெரிவித்துள்ளாா். திட்டத்தை செயல்படுத்தத் தவறியதை மறைக்கவே அவா் அவ்வாறு கூறிவருகிறாா்.
அமைச்சா் கூறியிருப்பது உண்மையெனில், மேட்டூா் உபரிநீா் திட்டத்தை செயல்படுத்தி இருக்க முடியாது. காவிரி-குண்டாறு திட்டத்தை செயல்படுத்த முடியாது. பாசன திட்டங்களை கொண்டுவரவில்லை என்றாலும் கூட, அதற்கான உரிமைகளை தாரைவாா்த்து விடாமல் இருப்பது நல்லது.
ஒகேனக்கல் உபரி நீரேற்றும் திட்டம், தருமபுரி சிப்காட், தருமபுரி-மொரப்பூா் இணைப்பு ரயில் பாதை போன்ற திட்டங்கள் தொடா்பாக திமுக அளித்துள்ள விளக்கம் அரசின் தோல்வியை ஒப்புக்கொள்வதுபோல உள்ளது.
தருமபுரி மாவட்ட வளா்ச்சிக்கு உதவும் திட்டங்களை அறிவிக்காத தமிழக முதல்வருக்கு, வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தருமபுரி மாவட்ட மக்கள் உரிய பாடம் புகட்டுவாா்கள்.