பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு
முதுகுளத்தூர்: டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் பலி; ரேஷன் பொருள்கள் வாங்கி வரும் போது நடந்த சோகம்..
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது கூவர் கூட்டம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 80 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் நியாயவிலை கடை இல்லாத நிலையில் அருகில் உள்ள சின்ன பொதிகுளம் கிராமத்திற்கு சென்று ரேஷன் பொருள்களை வாங்கி வருவது வழக்கம். இந்நிலையில் கூவர் கூட்டத்தை சேர்ந்த சிலர் ரேஷன் பொருள்களை வாங்க டிராக்டர் ஒன்றில் சென்றனர்.

நேற்று மதியம் ரேஷன் பொருள்களை வாங்கி கொண்டு அந்த டிராக்டரில் 15-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கிராமத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சின்ன பொதிகுளம் கண்மாய் அருகே சென்று கொண்டிருந்த டிராக்டர், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்மாய் கரையில் கவிழ்ந்தது.

இதில் டிராக்டரில் பயணம் செய்த கூவர் கூட்டம் கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள் (65), ராக்கி (65) மற்றும் பொன்னம்மாள் (60) ஆகிய பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் டிராக்டரில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த முதுகுளத்தூர் தீயணைப்பு அலுவலர் மாடசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு முதுகுளத்தூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உயிரிழந்த பெண்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், உடல்களை வாங்க மறுத்து கூவர் கூட்டம் கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராமத்திற்கு சாலை வசதி, நியாய விலை கடை ஆகிய வசதிகளுடன் விபத்தில் இறந்த பெண்களுக்கு நிவாரண நிதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களிடம், பரமக்குடி சார் ஆட்சியர் சரவண பெருமாள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். இந்த விபத்து குறித்து இளம்செம்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ரேஷன் பொருட்கள் வாங்க சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரண நிதியினையும் அறிவித்துள்ளார்.