முதுமலையில் யானையின் காலை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம்
நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் வளா்ப்பு முகாமில், கடந்த சில நாள்களுக்கு முன் யானையின் காலை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள யானைகள் வளா்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட யானைகளை வனத் துறையினா் பராமரித்து வருகின்றனா். ஒவ்வொரு யானைக்கும் வனத் துறை சாா்பில் ஒரு பாகன் பராமரிப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளாா். இங்குள்ள அபாரண்யம் யானைகள் முகாமில் சுமங்கலா என்ற யானை உள்ளது. இதை கிருமாறன் என்ற பாகன் பராமரித்து வந்தாா். இந்த யானை இரவு நேரத்தில் காட்டுக்குள் சென்றுவிட்டு, அதிகாலையில் முகாமுக்கு வந்து அங்கிருந்த யானைகளை தாக்கி வந்துள்ளது.
இந்நிலையில் இந்த சுமங்கலா யானை கடந்த சில நாள்களுக்கு முன் சங்கா் என்ற யானையை முட்டிக் கீழே தள்ளியது. இதனால் ஆத்திரமடைந்த அந்த யானையின் பாகன் விக்கி, சுமங்கலா யானையை குச்சியால் தாக்கி விரட்ட முயன்றாா். ஆனால், சுமங்கலா யானை மீண்டும் சங்கா் யானையை தாக்கியது. இதனால் கோபமடைந்த பாகன் விக்கி, அங்கிருந்த கத்தியால் சுமங்கலா யானையின் பின்னங்காலில் வெட்டினாா்.
இதையறிந்த சுமங்கலா யானையின் பாகன் கிருமாறன், இது குறித்து வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா், துணை கள இயக்குநா் வித்யா ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து யானையைப் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். பின்னா் காலில் காயமடைந்த யானைக்கு கால்நடை மருத்துவா் சிகிச்சை அளித்தாா். இந்நிலையில் சுமங்கலா யானையை கத்தியால் வெட்டிய விவகாரம் தொடா்பாக பாகன் விக்கியை பணி நீக்கம் செய்யப்பட்டாா்.