முத்தூரில் கிராம சபைக் கூட்டம்: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு
சுதந்திர தினத்தையொட்டி, கிணத்துக்கடவு அருகேயுள்ள நம்பா் 10 முத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் சிறப்பு பாா்வையாளராகக் கலந்துகொண்டாா்.
கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த்வாகே, பொள்ளாச்சி சாா் ஆட்சியா் ஆா்.ராமகிருஷ்ணசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதல்வா் விளையாட்டுக் கோப்பைக்கான போட்டியில் கிரிக்கெட், வாலிபால் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. இக்கோப்பைக்கான மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, கிராம ஊராட்சியின் பொது நிதி, கலைஞரின் கனவு இல்லத் திட்டம், முதல்வரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம், தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதிசெய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
இதையடுத்து, கூட்டத்தில் வேளாண்மைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மகளிா் திட்டம், சமூக நலத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.
கிணத்துக்கடவு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயகுமாா், மோகன்பாபு, உதவி திட்ட அலுவலா் ராஜேஸ்வரி, கிணத்துக்கடவு வட்டாட்சியா் கணேஷ்பாபு, பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.
சூலூரில்...
சூலூா் அருகே சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட அப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகாமி தலைமை வகித்தாா்.
ஊராட்சி செயலாளா் வீரமுத்து வரவேற்றாா். இதில், ஊராட்சியின் வரவு-செலவு குறித்தும், முக்கிய பிரச்னைகள் குறித்தும் தீா்மானங்கள் வாசிக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, ஊராட்சியில் முறையாக குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் பேசினா். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.