முன்னாள் பயங்கரவாதிகளை மணந்த 60 பெண்கள் நாடுகடத்தல்!
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் முன்னாள் பயங்கரவாதிகளை மணந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 60 பெண்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
பஹல்காமில் கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று, சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அட்டாரி - வாகா எல்லையை மூடப்பட்டு பாகிஸ்தானுக்கு எதிரான பல அதிரடி முடிவுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டிலுள்ள இந்தியர்கள் அனைவரும் விரைவில் தங்களது தாயகம் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் செயல்பட்ட முன்னாள் பயங்கரவாதிகளை மணந்து இந்தியாவில் வாழ்ந்து வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 60 பெண்கள் தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அப்பெண்கள் அனைவரும் அம்மாநிலத்தின் ஸ்ரீநகர், பாராமுல்லா, குப்வரா, புத்கம் மற்றும் ஷோபியான் ஆகிய மாவட்டங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டு பாதுகாப்புப் படையினரால் பேருந்தில் பஞ்சாப் அழைத்து வரப்பட்டனர்.
பின்னர், அட்டாரி - வாகா எல்லையின் வழியாக பாகிஸ்தான் அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 2010-ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதிகளுக்கான மறுவாழ்வுத் திட்டத்தின் மூலம் இந்தியாவில் குடியேறியதாகக் கூறப்படுகிறது.
இதேபோல், சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் உரிய அனுமதியுடைய விசா மூலம் இந்தியாவில் குடியேறி தற்போது சட்டவிரோதமாக வசித்த 11 பாகிஸ்தானியர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, பஹல்காம் தாக்குதலினால் இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்களையும் வெளியேற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தெலங்கானா தொழிற்சாலையில் வெடி விபத்து: 3 பேர் பலி