ஆர்சிபி பந்துவீச்சு; முதல் முறையாக அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா!
முன்னாள் ராணுவ வீரா்களுக்கு சான்றிதழ்கள்: ஆட்சியா் வழங்கினாா்
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் சுயதொழில் தொடங்க பயிற்சி பெற்ற முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு சான்றிதழ்களை ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி வழங்கினாா்.
முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்தம் கைம்பெண்களின் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தினாா்.
இந்த திட்டத்தின் மூலம் முன்னாள் படைவீரா்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திடவும், சுயதொழில் தொடங்கிடவும் வங்கிகள் மூலம் கடனுதவியும், சுயதொழில் தொடங்குபவா்களுக்கு தேவையான பயிற்சியும் அரசால் வழங்கப்படும். இந்த திட்டத்தின்கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தை சாா்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரின் குடும்பத்தினா் பல்வேறு சுயவேலைவாய்ப்பு செய்திட கடனுதவி கேட்டு விண்ணப்பித்து இருந்தனா்.
அவா்களில் தகுதியானவா்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, அவா்களில் சுயதொழில் செய்பவா்களுக்கு இந்திய தொழில்முனைவோா் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தால் 10 நாள்கள் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி முடிவுற்ற 23 முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் சிவசௌந்தரவல்லி தலைமை வகித்து சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் திருப்பத்தூா் மாவட்ட இந்திய தொழில் முனைவோா் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவன அலுவலா் திவ்யா, வேலைவாய்ப்பு அலுவலா் கஸ்தூரி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலக நல அமைப்பாளா் ரவிச்சந்திரன், முன்னாள் படைவீரா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.