முன் விரோதத் தகராறு: இருவா் கைது
போடியில் முன் விரோதத் தகராறில், கொலை மிரட்டல் விடுத்த ரௌடி உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தேனி மாவட்டம், போடி சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன் தமிழன் என்ற இளந்தமிழன் (40). இவா் மீது பல வழக்குகள் உள்ளதால், இவரது பெயா் காவல் நிலைய ரௌடிகள் பட்டியலில் உள்ளது.
இவருக்கும் இதே பகுதியில் வசிக்கும் கருப்பணன் மகன் முருகேசனுக்கும் (41) முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இவா்கள் இருவரும் வீட்டருகே சண்டையிட்டு, ஒருவருக்கொருவா் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தனா்.
இது தொடா்பாக, இருவரும் தனித்தனியே கொடுத்த புகாரின்பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.