முருகன் மாநாட்டு மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு - பழனி 2024 சிறப்பு மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24 மற்றும் 25 தேதிகளில் பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி தயாரிக்கப்பட்ட அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு - பழனி 2024 சிறப்பு மலரினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகெங்கிலும் உள்ள முருகபக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட முடிவு செய்யப்பட்டு, அதன்படி, 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பழனியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து முக்கிய பிரமுகர்கள், முருக பக்தர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் இந்த மாநாடு முத்தாய்ப்பாக அமைந்ததோடு, தமிழ் கடவுளாம் முருக பெருமானின் பெருமைகளை மென்மேலும் பறைசாற்றி, உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் பெருமையும், பேருவுவகையும் கொள்ளச் செய்யும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
இதையும் படிக்க |பட்டாசு ஆலை விபத்தில் பலியானோருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம்
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில மாண்பமை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆற்றிய உரைகள், தவத்திரு ஆதீனங்களின் ஆசி உரைகள், வெளிநாட்டினரின் கட்டுரைகள், விருது பெற்றவர்களின் சிறப்புகள், ஆய்வரங்கத்தில் வாசித்ததில் சிறந்த கட்டுரைகள், பேச்சாளர்களின் வாழ்த்துரைகள் ஆகியவற்றை உள்ளடக்கி மாநாட்டின் நிகழ்வு குறித்த வண்ணப் புகைப்படங்களுடன் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – பழனி 2024 சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தவத்திரு திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், இந்து சமய
அறநிலையத்துறை ஆணையர் திரு. பி.என். ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் டாக்டர் இரா. சுகுமார், சி.ஹரிப்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.