``ஹனுமான் வழிபாடு கிடையாது; ராவணன் எங்கள் முன்னோர்'' - மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ...
முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும்: போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
புதுக்கோட்டை: முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு சிஐடியு போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கம் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு, ஓய்வுபெற்ற ஊழியா் சங்கத்தின் பிரான்மலை, ஊழியா் சங்கத்தின் கே. காா்த்திகேயன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் எஸ். பாலசுப்பிரமணியன், போக்குவரத்துக்கழக ஊழியா் சங்கத்தின் செயலா் இரா. மணிமாறன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வுபெறும் நாளிலேயே பணப்பலன்களை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். 25 மாதங்களாக நிலுவையிலுள்ள ஓய்வூதியப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7-ஆவது ஊதியக்குழுவுக்கேற்ப உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.