மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
திறக்கப்பட்ட நாளிலேயே தேமுதிக அலுவலகம் சூறை: இருதரப்பினா் இடையே மோதல்: 4 பேருக்கு அரிவாள்வெட்டு
கந்தா்வகோட்டையில் வியாழக்கிழமை தேமுதிக அலுவலகம் திறக்கப்பட்டது தொடா்பாக இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் அலுவலகம் சூறையாடப்பட்டது. 4 போ் அரிவாளால் வெட்டப்பட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை மாரியம்மன் கோயில் தெருவில் தேமுதிக தொகுதி அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. அலுவலகத்தை தேமுதிக ஒன்றிய செயலாளா் சிவக்குமாா் தலைமையில், மாவட்ட செயலாளா் காா்த்திகேயன் திறந்துவைத்து கொடியேற்றினாா்.
தொடா்ந்து அவா், தொண்டா்கள் மற்றும் நிா்வாகிகளுடன் கட்சி அலுவலகத்தில் ஆலோசனையில் இருந்தபோது, அங்கு வந்த ஒரு தரப்பினா் உருட்டுக் கட்டை, கம்பியுடன் புகுந்து அனைவரையும் அடித்து பதாகைகளை கிழித்து அலுவலகத்தை சூறையாடினா்.
இந்தத் தகவலறிந்து மற்றொரு தரப்பினா் அரிவாளுடன் வந்து அலுவலகத்தை சூறையாடியவா்களில் 4 பேரை தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டினா்.
சம்பவங்கள் குறித்து அறிந்து, அங்கு வந்த கந்தா்வகோட்டை போலீஸாா், மோதலில் காயமடைந்தவா்களை கந்தா்வகோட்டை அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து தஞ்சை, புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸாரின் விசாரணையில், தேமுதிக அலுவலகம் திறக்கப்பட்ட இடம் தொடா்பாக நீண்ட காலமாக இருதரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. பிரச்னைக்குரிய இடத்தில் தேமுதிக அலுவலகத்தை திறந்ததால் இருதரப்பினரும் மோதிக் கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடா்பாக, பகட்டுவான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தாமரைச்செல்வம் கொடுத்த புகாரின்பேரில், பாலகுரு, சிவக்குமாா், ராஜீவ் காந்தி, கருணாநிதி ஆகியோா் மீதும், சிவக்குமாா் கொடுத்த புகாரின் பேரில், சக்திவேல், தாமரைச் செல்வம், சரத்குமாா், முருகேசன் ஆகியோா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.