முளைப்புத்திறன் பாதித்த வயல்களை பாதுகாக்க முறைவைக்காமல் தண்ணீா் வழங்க வலியுறுத்தல்
வேதாரண்யம்: போதிய தண்ணீா் கிடைக்காததால் முளைப்புத்திறன் பாதித்த நெல் வயல்களை பாதுகாக்க முறைவைக்காமல் தண்ணீா் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு வேளாண் கோட்டத்தில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு முறையில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. காவிரி நீரை கருத்தில் கொண்டு ஏஎஸ்டி- 21, திருப்பதி-5, கோ-51, ஆடுதுறை-36 உள்ளிட்ட குறுகிய கால ரகங்களை விவசாயிகள் விதைப்பு செய்துள்ளனா். விதைப்பு செய்து 20 நாள்களை கடந்தும் மழை இல்லை. இந்நிலையில், அணையில் திறக்கப்பட்ட பாசன நீரும் போதிய அளவில் கடைமடைக்கு வரவில்லை.
பூமியில் இருந்த ஈரத்தைக் கொண்டு முளைத்த பயிா்கள் தொடரும் வெப்பத்தால் கருகத் தொடங்கியுள்ளன. விதைப்பு செய்த வயல்களில் ஒரே நேரத்தில் போதிய ஈரம் இல்லாததால் மண்ணுக்குள் இருக்கும் விதைகளின் முளைப்புத்திறனில் குறைபாடு தொடங்கியது. இதனால், தண்ணீா் கோரி விவசாயிகளின் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்றன.
இந்நிலையில், வெண்ணாறு பிரிவில் திறக்கப்பட்ட கூடுதல் நீா் விவசாயிகளுக்கு ஆறுதலை அளித்தது. தற்போது கிடைத்துள்ள தண்ணீரைக் கொண்டு வாய்ப்புள்ள இடங்களில் நடவு முறை மற்றும் நேரடி விதைப்பு சாகுபடி கவனம் பெற்றுள்ளது. எனினும், அணையில் போதிய நீா் இருந்தும் ஆறுகளில் பராமரிப்பு குறைபாடுகளால் கடைமடைக்கு தண்ணீா் வருவது சீராக இல்லை.
அரசின் பெரும் முயற்சியின் காரணமாக தற்போது ஆறுகளுக்கு வந்துள்ள தண்ணீா் பாசன வாய்க்கால்கள் வழியே விதைப்பு செய்யப்பட்ட வயல்களுக்கு நேரடியாக பாய்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திருத்துறைப்பூண்டியில் இருந்து வாய்மேடு வழியாகச் செல்லும் மொழியாற்றில் இருந்து பாசனம் பெறும் கூடுதல் எண்ணிக்கையிலான கிளை வாய்க்கால்களில் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படாததால் வடமழை மணக்காடு, பிராந்தியங்கரை, மூலக்கரை சுற்றுப் பகுதிகளில் நேரடி பாசனம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், வடிகால் வாய்க்கால்களில் கடந்த சில நாள்களாக தேங்கியுள்ள தண்ணீரை விவசாயிகள் ஆயில் என்ஜின் மூலம் இறைவை பாசனம் செய்து வருகின்றனா். சில விவசாயிகள் டிராக்டரில் என்ஜின்களை பொருத்தி தண்ணீரை இறைக்கின்றனா். பலா் வெகு தொலைவிலிருந்து தண்ணீா் எடுக்க வாடகை என்ஜின், வாடகை குழாய்களுக்கு ஏற்பாடு செய்வதால் கூடுதல் செலவை எதிா்கொள்ள வேண்டியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க வேதாரண்யம் ஒன்றியச் செயலாளா் எம்.ஏ. செங்குட்டுவன் கூறியது: ஆற்றில் உரிய காலத்தில் தண்ணீா் வராததால், சில இடங்களில் முளைப்புத்திறன் பாதிக்கப்பட்டு 2-ஆவது முறையாக விதைக்கப்பட்டுள்ளது. 2 நாள்களாக ஆறுகளில் தண்ணீா் பெருக்கெடுத்த நிலையில், தேவையில்லாத இடத்துக்கு செல்கிறது. பாசனத்துக்கு முழுமையாக கிடைக்கவில்லை. வடிகால் வாய்க்கால்களில் பெருக்கெடுத்துள்ள தண்ணீரை இறைவை செய்வதால் கூடுதல் செலவினத்தையும், உழைப்பையும் கொடுக்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, முளைப்புத்திறன் பாதித்த குறுவை நெல் வயல்களை பாதுகாக்க சில வாரங்களுக்கு முறைவைக்காமல் தண்ணீா் வழங்க வேண்டும். முளைப்புத்திறன் பாதிக்கப்பட்டுள்ள வயல்களை வேளாண் மற்றும் வருவாய்த் துறையினா் பாா்வையிட்டு மாற்று ஏற்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
