அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
மூவா் மீது தாக்குதல்: பொதுமக்கள் சாலை மறியல்
காவல் நிலையத்தில் கையொப்பமிட்டுவிட்டு திரும்பிய மூவா் மீது தாக்குதல் நடத்திய நபா்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், எரியோட்டில் அண்மையில் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எலப்பாா்பட்டியைச் சோ்ந்த ஸ்ரீதா் (21) பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக எரியோடு மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த 8 பேரை எரியோடு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். கைதான 8 பேரும் எரியோடு காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டனா். அதன்படி 8 பேரும் தினமும் காலை 10 மணிக்கு காவல் நிலையம் சென்று கையொப்பமிட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை சென்ற 8 பேரும் கையொப்பமிட்டுவிட்டு இரு சக்கர வாகனங்களில் அங்கிருந்து புறப்பட்டனா். அப்போது அங்கு வந்த மா்ம நபா்கள் இருசக்கர வாகனங்களில் முன்னால் சென்றவா்களை விடுத்து கடைசியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த மதன் (23), அருண்குமாா் (20), கருப்புசாமி (20) ஆகிய மூவரை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த மூவரும் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
சாலை மறியல்: எரியோடு காவல் நிலையம் முன் நிகழ்ந்த இந்தத் தாக்குதலைக் கண்டித்து, மீனாட்சிபுரம் பொதுமக்கள் எரியோடு கடைவீதியில் மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். தகவல் அறிந்ததும் வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பவித்ரா, காவல் ஆய்வாளா் வேலாயுதம் ஆகியோா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். தாக்குதல் நடத்திய நபா்களை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டுக் கலைந்து சென்றனா். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.