நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவித தளா்வும் இருக்காது: மத்திய...
மேட்ரிமோனியில் பெண்பார்த்த LIC ஏஜென்ட்; வரன்பார்க்க வருவதாக நகையைத் திருடிய பெண்கள்
கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் அருகே உள்ள காரவிளையில் 55 வயதுள்ள ஒருவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன் மனைவியைபப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இது சம்பந்தமான வழக்கு நாகர்கோவில் குடும்ப நலக் கோர்ட்டில் உள்ளது. அவரது தாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தன் தாயைக் கவனித்துக்கொள்வதற்காக இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்தார். அதற்காக மேட்ரிமோனி இணையதளத்தில் தனது சுய விபரங்களைப் பதிவு செய்திருந்தார். அவரது மொபைல் எண்ணுக்கு மதுரையைச் சேர்ந்த முருகேஸ்வரி என்ற பெண் தொடர்பு கொண்டு, அவரைத் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறினார். மேலும், குடும்பத்துடன் அவரை நேரில் பார்ப்பதற்காக வருவதாகவும் முருகேஸ்வரி கூறியுள்ளார். அதன்படி முருகேஸ்வரி உள்ளிட்ட மதுரையைச் சேர்ந்த நான்கு பெண்கள் காரவிளையில் உள்ள எல்.ஐ.சி ஏஜென்ட்டின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

எல்.ஐ.சி ஏஜென்ட் அந்த நான்கு பெண்களையும் வரவேற்றுப் பேசியிருக்கிறார். அப்போது திருமணத்திற்கு வாங்கி வைத்திருந்த தங்க வளையல், மோதிரம் உள்ளிட்ட நகைகளையும் அந்தப் பெண்களிடம் காண்பித்துவிட்டு மேஜை டிராயரில் வைத்தார். நான்கு பெண்களும் எல்.ஐ.சி ஏஜென்ட்டின் வீட்டில் சிறிதுநேரம் இருந்து பேசிவிட்டுச் சென்றனர். சில நாட்களுக்குப்பிறகு மேஜை டிராயரில் இருந்த நகைகளைப் பார்த்தபோதுதான், நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. வீடுமுழுவதும் நகையைத்தேடியும் கிடைக்காததால் திருமணம் செய்வதாக வீட்டுக்கு வந்த மதுரையைச் சேர்ந்த நான்கு பெண்கள் மீதும் சந்தேகம் எழுந்தது.
திருமண வரன் பார்க்க வந்த முருகேஸ்வரியைத் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து மற்றொரு பெண்ணின் எண்ணில் தொடர்புகொண்டு பேசியபோது அவரைத் திருமணம் செய்ய முருகேஸ்வரிக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். நகை குறித்து கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாகப் பேசியிருக்கிறார்.

இதையடுத்து 8 சவரன் நகை திருடுபோனதாக எல்.ஐ.சி ஏஜென்ட் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது நகையைத் திருடி சென்றது மதுரை கும்பல்தான் என்பது தெரியவந்தது. போலீசார் மதுரையைச் சேர்ந்த முருகேஸ்வரி, கார்த்திகையாயினி, முத்துலட்சுமி, போதும்பொன்னு ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். இவர்கள் திருமணம் செய்வதாக வேறு யாரையாவது ஏமாற்றி இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.