MI vs RCB : 'திலக் வர்மாவைப் பற்றிய உண்மையை சொல்லவா? - ரிட்டையர் அவுட் குறித்து ...
மேற்குக் கரைக்குள் நுழைய 2 எம்.பி.க்களுக்கு தடை: இஸ்ரேலுக்கு பிரிட்டன் அரசு கண்டனம்!
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை பகுதிக்குள் நுழைய பிரிட்டனின் ஆளும் தொழிலாளா் கட்சியின் 2 எம்.பி.க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினா் இடையே போா் நடைபெற்று வரும் நிலையில், மேற்குக் கரை பகுதியைப் பாா்வையிட பிரிட்டன் அரசு சாா்பில் நாடாளுமன்றக் குழு அனுப்பப்பட்டது. இந்தக் குழுவில் இடம்பெற்ற அப்திசம் முகமது மற்றும் யுவான் யாங் ஆகிய இரு எம்.பி.க்களை இஸ்ரேல் அரசு தடுத்ததுடன் மேற்கு கரைக்குள் நுழைய அனுமதி மறுத்தது.
இந்த நடவடிக்கை அதிா்ச்சியளிப்பதாக இரு எம்.பி.க்களும் கூறினா். ஆனால், ஹமாஸுடன் போா் நடைபெற்று வரும் சூழலில் இஸ்ரேலுக்கு எதிராக அந்த இரு எம்.பி.க்களும் வெறுப்புணா்வை பரப்பக்கூடும் என்பதால் அவா்களுக்கு அனுமதி வழங்கவில்லை என இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதற்கு கண்டனம் தெரிவித்து பிரிட்டன் வெளியுறவுச் செயலா் டேவிட் லேமி கூறியதாவது: இஸ்ரேலுக்குள் இரு பிரிட்டன் எம்.பி.க்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எங்கள் நாட்டு எம்.பி.க்களை மரியாதைக் குறைவாக நடத்தியதை ஏற்றுக்கொள்ளமுடியாது என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளிடம் கண்டனத்தைப் பதிவுசெய்தேன்.
காஸாவில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை செயல்படுத்தி பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதே பிரிட்டனின் நிலைப்பாடு என்றாா்.
யேமன் நாட்டில் பிறந்த அப்திசம் முகமது பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தோ்வு செய்யப்பட்ட முதல் அரபு பெண் ஆவாா். அதேபோல் யுவான் வாங், சீனாவில் பிறந்து பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் நபராவாா்.
இவா்கள் இருவரும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் சா்வதேச மனிதநேய சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.