மே.இ.தீவுகள் டெஸ்ட் அணி கேப்டன் பதவி விலகல்! டி20 கேப்டனாகும் ஷாய் ஹோப்!
மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் கேப்டன் கிரெய்க் பிராத்வெய்ட் தனது தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது. மேலும், டி20 அணியின் கேப்டனாக ஷாய் ஹோப் நியமிக்கப்பட்டுள்ளார்.
32 வயதான கிரெய்க் பிராத்வெய்ட், முன்னர் இருந்த டெஸ்ட் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்குப் பதிலாக 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நியமிக்கப்பட்டார். அதேவேளையில், டி20 கேப்டனாக தற்போதைய ஒருநாள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப், ரோமன் பவலுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ரோமன் பவல் மேற்கிந்திய தீவுகள் அணியை தலைமை வகித்து வந்தார்.
2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் தொடருக்கான போட்டியில் ஜூன் - ஜூலை மாதங்களில் ஆஸ்திரேலிய அணியை மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் கேப்டன் நியமிக்கப்படவிருக்கிறார். புதிய கேப்டன் யார்? என்பது குறித்து வரும் வாரங்களில் தெரிவிக்கப்படும்.
கடந்தாண்டில் மட்டும் பிராத்வெய்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணி 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிஸ்பேனில் ஒரு வெற்றியும், 34 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் இரு வெற்றியும் பெற்றது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிக்க: 1.78 கோடி பின்தொடர்வோர்.. இன்ஸ்டாகிராமில் சிஎஸ்கேவை முந்திய ஆர்சிபி!