அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் பணியிடை நீக்கம்
மோடி வாய்த் திறந்தால் முழு உண்மையையும் டிரம்ப் கூறிவிடுவார்! ராகுல்
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப் குறித்து பேசாதது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து கடந்த மூன்று நாள்களாக விவாதம் நடைபெற்று வருகின்றன.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் மோடியும் ராகுல் காந்தியும் பங்கேற்று பேசினர்.
அப்போது பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூரை நிறுத்துமாறு உலகின் எந்த நாட்டுத் தலைவரும் இந்தியாவிடம் கூறவில்லை என்று டிரம்பின் பெயரைக் குறிப்பிடாமல் மோடி பேசியிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில், ”இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால் 25 % இறக்குமதி வரி விதிக்கப்படும், தனது வேண்டுகோளின் பெயரிலேயே இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது” என 30-வது முறையாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் ராகுல் காந்தி பேசுகையில்,
”டிரம்ப் பொய் கூறுகிறார் என்று பிரதமர் மோடி வெளிப்படையாக கூறவில்லை என்பது அனைவரும் அறிந்தது. அவரால் பேச முடியாது. மோடி பேசினால், உண்மையில் என்ன நடந்தது என்பதை முழுமையாக டிரம்ப் கூறிவிடுவார். அதனால்தான் பேச இயலாத சூழலுக்கு மோடி தள்ளப்பட்டுள்ளார்.
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை விரும்புவதால் டிரம்ப் நெருக்கடி கொடுக்கும் வகையில் பேசுகிறார். தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறார். எப்படிப்பட்ட ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தையில் இருக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை இரண்டு நாள்களில் இறுதி செய்யாவிட்டால், ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.