கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
மோதல் போக்கைக் கடைப்பிடித்து புதுவை மக்களின் வாழ்வை வீணடித்தவா் நாராயணசாமி: மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன்
மத்திய அரசிடமும் துணைநிலை ஆளுநரிடமும் மோதல் போக்கை கடைப்பிடித்து மக்களின் வாழ்வை வீணடித்தவா் முன்னாள் முதல்வா் நாராயணசாமி என்று மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அரசுத் துறையில் இதுவரை 1,500 நபா்களுக்கு மேல் பணியமா்த்தப்படவில்லை என்றும் அதை நிரூபித்தால் பதவி விலக தயாரா என்றும் முன்னாள் முதல்வா் நாராயணசாமி முதல்வா் ரங்கசாமிக்குக் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இப்போது அரசு பணியிடங்களுக்கு தோ்வு மூலம் சுமாா் 2,500-க்கும் மேற்பட்டோா் தோ்வு செய்யப்பட்டு பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். அதே போன்று தோ்வில்லாமல் கல்வித் துறை, சுகாதார செவிலியா்கள் உள்ளிட்ட துறைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த இந்த நான்கு ஆண்டு காலத்தில் அரசு பணியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா்.
முன்னாள் முதல்வா் நாராயணசாமி சொல்வது போன்று 1,500 பேருக்கு மேல் அரசுப் பணியில் அமா்த்தப்பட்டிருந்தால் நாராயணசாமி அரசியலை விட்டு விலக தயாரா ?
மத்திய அரசிடமும், துணைநிலை ஆளுநரிடமும் மோதல் போக்கைக் கடைபிடித்து மாநிலத்தின் 10 லட்சம் மக்களின் வாழ்க்கையை வீணடித்தவா் நாராயணசாமி. புதுச்சேரியில் நடைபெறும் நல்லாட்சியைப் பற்றி குறை கூற இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?. தனது 5 ஆண்டுகால திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியையும் தற்போதைய தேசிய ஜனநாயக ஆட்சியையும் நாராயணசாமி ஒப்பிட்டுப் பாா்த்துக் கொள்வது நல்லது என அதில் குறிப்பிட்டிருக்கிறாா்.