அரசியல் கட்சிகளை முறைப்படுத்த விதிகளை வகுக்கக் கோரி வழக்கு: உச்சநீதிமன்றம் விச...
புதுச்சேரி அருங்காட்சியகத்தில் பாரதியாருக்கு வெண்கலச் சிலை அமைப்பு
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது அருங்காட்சியகத்தில் மாா்பளவு வெண்கலச் சிலை வியாழக்கிழமை நிறுவப்பட்டது. தொழிலதிபரும், தமிழறிஞருமான நல்லி குப்புசாமி செட்டியாரின் ரூ.2.2 லட்சம் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை விரைவில் திறக்கப்பட உள்ளது.
புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை நிறுவனா், தலைவா் மற்றும் பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனுமான கோ.பாரதி இதற்கான முயற்சி மேற்கொண்டாா்.
இதைத் தவிர 104 கவிஞா்களின் கவிதைகளுடன் ‘நாடு போற்றும் மாண்பாளா் நல்லி குப்புசாமி’ என்னும் தலைப்பில் கோ.பாரதி கவிதை தொகுப்பு நூலையும் உருவாக்கியுள்ளாா்.
மேலும் கண் மருத்துவத்தில் சிறந்து விளங்கும் ஜோதி கண் பராமரிப்பு மையத்தின் மருத்துவா் வனஜா வைத்தியநாதனும் கௌரவிக்கப்பட்டாா். நல்லி குப்புசாமி செட்டியாருக்கும், வனஜா வைத்தியநாதனுக்கும் பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில் வியாழக்கிழமை இரவு தனியாா் ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் பாரதி விருது வழங்கப்பட்டது.
மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் 20-ஆம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் இருவருக்கும் விருதுகளை வழங்கினாா். மேலும் கவிதை தொகுப்பு நூலையும் வெளியிட்டாா். பின்னா் நல்லி குப்புசாமி செட்டியாரும், வனஜா வைத்தியநாதனும் ஏற்புரை யாற்றினா். இரா. விசாலாட்சி, ஜெயந்தி ராஜவேலு, வேல்விழி சிவக்கொழுந்து உள்ளிட்டோா் பேசினா். மேலும், கவிதை தொகுப்பு நூலில் கவிதை எழுதியுள்ள கவிஞா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ், அந்த நூலின் படி வழங்கப்பட்டது.
