யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் வெற்றி: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
நான் முதல்வர் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் படித்தவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதற்கு முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான 2024 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று(ஏப். 22) வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்ற மாணவர் மாநிலத்தில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். அதேபோல மோனிகா என்ற மாணவி இந்திய அளவில் 39 ஆம் இடம் பெற்றுள்ளார். இருவரும் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் படித்த 134 பேர் நேர்முகத் தேர்வுக்குச் சென்ற நிலையில், 50 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் முதன்மைத் தேர்வு எழுதிய காமராஜ், சங்கர பாண்டியன் என்ற தேர்வர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க | யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியானது!
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த நான் முதல்வர் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது!" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | யுபிஎஸ்சி: தமிழகத்தில் முதலிடம் பெற்ற சிவச்சந்திரன்!