பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் நண்பன்! ரசிகர்கள் பாராட்டு!
யேமனில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் நிமிஷா யார்? செய்த குற்றம் என்ன?
கேரளத்தைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியா, யேமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தியைக் கொலை செய்தக் குற்றத்துக்காக மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார்.
2017ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை யேமன் அதிபர் உறுதி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளையில், நிமிஷா பிரியாவை மீட்க, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. யேமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி இந்த வாரத் தொடக்கத்தில், மரண தண்டனையை உறுதி செய்திருப்பதால், இந்த மாதத்துக்குள் நிமிஷாவுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற தேதி குறிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
யார் இந்த நிமிஷா பிரியா?
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, 2008 ஆம் ஆண்டு தனது தினக்கூலிகளாக இருக்கும் பெற்றோருக்கு பொருளாதார அளவில் உதவி செய்வதற்காக யேமனுக்குச் சென்றார்.
அங்கு பல்வேறு மருத்துவமனைகளில் இரவு - பகலாக பணியாற்றினார். இந்த நிலையில்தான், யேமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தியுடன் நட்பு ஏற்பட்டு இருவரும் இணைந்து சொந்தமாக மருத்துவமனை ஒன்றை திறந்தனர்.
சிறிய மருத்துவமனையிலிருந்து ஈட்டப்பட்ட வருவாயை மஹ்தி தவறாக பயன்படுத்தியதால், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிமிஷாவின் பாஸ்போர்ட்டை கொடுக்காமல் மஹ்தி தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. 2016ஆம் ஆண்டு மஹ்தி மீது நிமிஷா கொடுத்த புகாரையடுத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பிறகு வெளியே விடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகராறு முற்ற, 2017ஆம் ஆண்டு, சிக்கலைத் தீர்க்குமாறும், தனது பாஸ்போர்ட்டை பெற்று மீண்டும் இந்தியா திரும்ப நினைத்த நிமிஷா, அங்கிருந்த சிறை வார்டனின் உதவியை நாடினார். அவரோ மயக்க மருந்தைப் பயன்படுத்தி மஹ்தியை நினைவிழக்கச் செய்து பாஸ்போர்ட்டை மீட்க யோசனை கூறினார்.
அதனை ஏற்றுக்கொண்ட நிமிஷா, மஹ்திக்கு ஊசி மூலம் மயக்க மருந்து கொடுத்தபோது, அது குறிப்பிட்ட அளவை விட அதிகரித்து அதில் மஹ்தி உயிரிழந்தார்.
இதையடுத்து, மஹ்தியை கொலை செய்த நிமிஷா யேமனைவிட்டு தப்ப முயற்சித்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் 2018 ஆம் ஆண்டில் குற்றவாளியாக நிமிஷா அறிவிக்கப்பட்டார். யேமன் தலைநகர் சனா நீதிமன்றத்தால் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டால் மரண தண்டனை ரத்து செய்வதற்கான வாய்ப்பை யேமன் நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, யேமனுக்கு சென்ற நிமிஷா பிரியாவின் தாய் பிரேமா குமாரி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் இழப்பீடு தொகை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய தூதரகம் சார்பில் வழக்கறிஞரும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
நிமிஷாவின் தாய், யேமன் நாட்டு உச்ச நீதிமன்றத்தில், மரண தண்டனையை எதிர்த்துத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் 2023ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், இழப்பீடு தொகையை ஏற்க பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில்தான், நிமிஷாவுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற யேமன் அதிபர் ரஷீத் முகமது அல்-அம்மி அனுமதி அளித்துள்ளார். இதனால், நிமிஷா பிரியாவுக்கு இந்த மாதத்துக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.