ரஜினி படத்தின் தெலுங்கு தயாரிப்பாளர் கோவாவில் தற்கொலை - போலீஸ் விசாரணை!
தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கே.பி.சௌத்ரி (44) தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ரஜினி நடித்த கபாலி படத்தை தெலுங்கில் தயாரித்ததன் மூலம் மேலும் பிரபலமாக அறியப்பட்டவர் கே.பி.சௌத்ரி. கோவாவில் சியோலிம் பகுதியில் வாடகை வீட்டில் இவர் வசித்துவந்த நிலையில், நேற்று வெகுநேரமாக அறைக் கதவு திறக்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனால், அங்கிருந்தவர்கள் சந்தேகித்து உள்ளே நுழைந்தபோது அவர் தூக்கில் இறந்த நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அங்கு வந்த போலீஸார், உடலை மீட்டனர். போலீஸின் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தற்கொலைக்கான கரணம் என்னவென்று அறிய போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் அக்ஷத் கௌஷால், அஞ்சுனா காவல் நிலையத்தின் சியோலிம் புறக்காவல் நிலையத்துக்கு இது குறித்து தகவல் கிடைத்ததாகவும், தற்போது விசாரணை நடைபெற்றுவருவதால் விவரங்கள் சரியான நேரத்தில் பகிரப்படும் என்றும் கூறினார்.
2023-ல் ஆண்டு போதைப்பொருள் வழக்கு தொடர்பாக சைபராபாத் சிறப்பு நடவடிக்கைக் குழு இவரைக் கைது செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.