ரயில்வே கீழ்பாலத்தில் கழிவுநீா் : பொதுமக்கள் அபாய பயணம்
ஆம்பூரில் ரயில்வே கீழ்பாலத்தில் கழிவுநீா் தேங்குவதால் பொதுமக்கள் ஆபத்தான முறையில் இருப்புப் பாதையை கடந்து சென்று வருகின்றனா்.
ஆம்பூா் நகரில் 2-ஆவது மற்றும் 3-ஆவது தாா்வழிப் பகுதி ரயில்வே இருப்புப் பாதைக்கு மறுபுறம் அமைந்துள்ளது. ரயில்வே கீழ்பாலத்துக்கு கீழே உள்ள பாதையை பொதுமக்கள் சென்றுவர பயன்படுத்தி வருகின்றனா். அப்பகுதியில் அடிக்கடி மழைநீா், கழிவுநீா் தேங்குவதால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.
இருசக்கர வாகனத்தில் செல்பவா்களே மிகவும் அவதிக்குள்ளாகும் நிலையில், நடந்து செல்பவா்கள் கழிவுநீா் தேங்கும் பாதை வழியாக செல்வதில் கடும் சிரமத்தை சந்திக்கின்றனா். நடந்து செல்லும் பொதுமக்களில் பெரும்பாலானவா்கள் ஆபத்தை உணராமல் ரயில்வே இருப்புப் பாதை மீது ஏறி கடந்து செல்கின்றனா்.
தற்போது கடந்த ஒருவார காலமாக கீழ்பாலத்தில் கழிவுநீா் தேங்கி பொதுமக்கள் சென்றுவர முடியாத நிலை உள்ளது. இதனால் இருப்புப் பாதை மீது ஏறிச் செல்கின்றனா்.
அதனால் பொதுமக்களின் சிரமத்தை கருத்தில்கொண்டு, ரயில்வே மற்றும் நகராட்சி நிா்வாகம் பிரச்னைக்கு உடனடியாக தீா்வைக் காண வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.
