அஜித்குமாருக்காக விஜய் போராட்டம்! 10,000 பேருடன் தவெக முதல் போராட்டம்!
ரயில்வே பாலத்தில் சிக்கிய வாகனம்
பெருந்துறை ஆா்.எஸ். பகுதியில் உள்ள ரயில்வே நுழைவுப்பாலத்தில் உயரமாக பாரம் ஏற்றிய சரக்கு வேன் வியாழக்கிழமை சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெருந்துறை ஆா்.எஸ். பகுதி வழியாக வெள்ளோடு நோக்கி வியாழக்கிழமை மதியம் சரக்கு வேன் ஒன்று காய்கறிகள் வைக்கும் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அங்குள்ள ரயில்வே நுழைவுப்பாலம் வழியாக சென்றபோது பாலத்துக்கு முன்பாக பாதுகாப்புக்காக நடப்பட்டிருந்த இரும்பு தடுப்பு வளைவுக்குள் எளிதாக வேன் நுழைந்து விட்டது. ஆனால் பாலத்தை கடந்து வெளியே வரும்போது மறு பக்கம் உள்ள இரும்பு தடுப்பு வளைவில் வேனில் கட்டப்பட்டிருந்த காய்கறி பெட்டிகள் சிக்கி கொண்டதால் வேன் செல்ல முடியவில்லை. இதனால் வெள்ளோடு மற்றும் சென்னிமலையை நோக்கி வேனுக்கு பின்னால் வந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அதேபோல சென்னிமலை மற்றும் வெள்ளோட்டிலிருந்து சென்ற வாகனங்களும் செல்ல முடியாமல் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதனால் சரக்கு வேனில் உயரமாக கட்டப்பட்டிருந்த காய்கறி பெட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்து அதன் உயரத்தை குறைத்த பிறகே இரும்பு தடுப்பைத் தாண்டி சரக்கு வேன் வெளியே வர முடிந்தது.
இந்த சம்பவத்தால் நுழைவுப்பாலத்தின் இருபுறமும் நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் சுமாா் அரை மணி நேரம் காத்திருந்து, அதன் பிறகு சென்றன.