ரஷியாவின் டிரோன் தாக்குதலில் சிதைந்த உக்ரைன் நகரங்கள்! 2 பேர் பலி!
உக்ரைனின் கடற்கரை நகரத்தின் மீதான ரஷியாவின் டிரோன் தாக்குதலில் 2 பேர் பலியானதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஒடேசா எனும் கடற்கரை நகரத்திலுள்ள ஏராளமான குடியிருப்பு கட்டடங்கள், தனியார் வீடுகள், ஒரு பள்ளிக்கூடம் மற்றும் அங்குள்ள கடைகள் மீது இன்று (மே.1) அதிகாலை ரஷிய டிரோன்கள் குண்டுகளை வீசியுள்ளன. இந்தத் தாக்குதலில் 2 பேர் பலியானதுடன், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து, வெளியான விடியோக்களில், தாக்குதலில் அங்குள்ள கட்டடங்களில் தீப்பற்றி எரிவதும் அதனை அணைக்க தீயணைப்புப் படையினர் போராடுவதும் பதிவாகியுள்ளது. இதேபோல், உக்ரைனின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான காரிவ் மீதான டிரோன் தாக்குதலில் அங்குள்ள பெட்ரோல் நிலையம் வெடித்து சிதறியுள்ளது.
இதுகுறித்து, உக்ரைனின் விமானப் படை கூறுகையில், ரஷியா 170 டிரோன்கள் மற்றும் அதன் டிகோய்களை (போலிகள்) உக்ரைனின் 5 நகரங்களுக்குள் அனுப்பி நேற்று (ஏப்.30) தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அதில் 74-க்கும் மேற்பட்டவை அடையாளம் காணப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், ரஷியா உக்ரைன் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலமாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், உக்ரைனின் 8 டிரோன்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இரண்டாம் உலகப் போரின் வெற்றி நாளை முன்னிட்டு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அடுத்த வாரம் 72 மணி நேர போர்நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் காட்டுத் தீ! அவசரநிலை அறிவிப்பு!