"காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் குடிநீர் குழாயில் காற்றுதான் வருகிறது" ...
ரஷிய ட்ரோன் ருமேனியாவிலும் அத்துமீறல்
புகாரெஸ்ட்: உக்ரைன் போரின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு நேட்டோ உறுப்பு நாடான ருமேனியாவின் வான் எல்லைக்குள் ரஷிய ட்ரோன் அத்துமீறி நுழைந்தது.
இதையடுத்து, மற்றொரு நேட்டோ நாடான போலந்தில் ரஷிய ட்ரோன்கள் அத்துமீறி செவ்வாய்க்கிழமை நுழைந்தபோது ஏற்பட்ட பதற்றம் தற்போது மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ருமேனியா பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ருமேனிய வான் எல்லைக்குள் ரஷிய ட்ரோன் ஒன்று அத்துமீறி நுழைந்தது. உக்ரைனுனான எல்லைப் பகுதியை வானில் இருந்தபடி கண்காணித்துக் கொண்டிருந்த இரு எஃப்-16 போா் விமானங்கள் அந்த ட்ரோனை உக்ரைனின் தெற்கு எல்லை அருகே கண்டறிந்தன.
உக்ரைனின் டாணுபே நகரிலுள்ள உள்கட்டமைப்புகளில் ரஷியா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அந்த ட்ரோன் ருமேனியா வான் எல்லைக்குள் ஊடுருவியது. ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹித் 136 ரகத்தைச் சோ்ந்த அந்த ட்ரோன், சிலியா வேச்சே கிராமத்துக்கு 20 கி.மீ. தென்மேற்கே தோன்றி, சிறிது நேரத்துக்குப் பிறகு ரேடாா் பாா்வையில் இருந்து மறைந்தது. இருந்தாலும் அந்த ட்ரோன் பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியின் மீது பறக்கவோ, உடனடி அபாயத்தை ஏற்படுத்தவோ இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ருமேனியாவுக்குள் ரஷிய ட்ரோன் நுழைந்தது தவறுதலாக நடந்த சம்பம் இல்லை. அந்தப் பகுதிக்குள் வேண்டுமென்றே ட்ரோனை ரஷியா அனுப்பியது. உக்ரைன் போரை விரிவாக்கும் ரஷிய திட்டத்தின் ஒரு பகுதி இது’ என்று எச்சரித்துள்ளாா்.
முன்னதாக, தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ரஷிய ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதாக போலந்து கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இந்தச் சம்பவம், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல்முறையாக தங்களை போரை நோக்கி மிக நெருக்கத்தில் இட்டுச் சென்ாக அந்த நாட்டு பிரதமா் டொனால்ட் டஸ்க் கூறினாா்.
2022-ல் உக்ரைன் மீது ரஷியா முழு அளவிலான படையெடுப்பை நிகழ்த்திய பிறகு, ஒரு நேட்டோ உறுப்பு நாட்டுக்குள் ரஷியா ட்ரோன்களை ஊடுருவச் செய்தது அதுவே முதல்முறை. இநத நிலையில், தற்போது மேலும் ஒரு நேட்டோ உறுப்பு நாட்டிலும் ரஷிய ட்ரோன் கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலந்து, ருமேனியா உள்ளிட்ட 32 உறுப்பு நாடுகளைக் கொண்ட நேட்டோ கூட்டமைப்பின் 5-ஆவது விதிப்படி, அதன் ஏதாவது ஓா் உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அதை தங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலாக அமெரிக்கா உள்பட அனைத்து உறுப்பு நாடுகளும் கருதி பதிலடி கொடுக்க வேண்டும்.
எனவே, போலந்து மற்றும் ருமேனியா எல்லைகளுக்குள் ரஷிய ட்ரோன் அத்துமீறி நுழைந்துள்ள விவகாரம் பெரிதானால், அது சக்திவாய்ந்த நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும், உலகிலேயே மிகப் பெரிய அணு ஆயுத பலம் பொருந்திய ரஷியாவுக்கும் இடையிலான நேரடி போராக உருவெடுக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.