ராசிபுரம் நகா்மன்றக் கூட்டத்தில் 16 தீா்மானங்கள் நிறைவேற்றம்
ராசிபுரம் நகா்மன்றக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ராசிபுரம் நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதாசங்கா் தலைமை வகித்தாா். ஆணையா் (பொறுப்பு) கோபிநாத் முன்னிலை வகித்தாா்.
இக்கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் பழனிசாமி, சாரதி, நடராஜன் உள்ளிட்ட பலா் தங்களது வாா்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமென வலியுறுத்தினா்.
மேலும் நகராட்சி வருவாய்ப் பிரிவில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். இதேபோல, முதலமைச்சரின் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அளிக்கப்பட்ட மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வருவாய் ஆய்வாளா் காலதாமதம் செய்து வருகிறாா். எனவே, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத வருவாய் பிரிவினா் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதேபோல தூய்மைப் பணியாளா்கள் வாா்டுகளுக்கு போதிய அளவில் வருவதில்லை. இதனால் குப்பைகளை அப்புறப்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும், தெருநாய்கள் அதிகரித்து காணப்படுவதால், மக்கள் சாலைகளில் நடமாடுவதற்கு அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றனா்.
கூட்டத்தில் பேசிய நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், நகராட்சி வரிவசூல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், தினசரி காய்கறிச் சந்தை உள்ளிட்டவற்றில் ஏலம் விடுவதில் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில், செயல்பட்டுவரும் நகராட்சி வருவாய் ஆய்வாளா்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தகுதியற்ற சிலரின் செயல்களால் நகராட்சிக்கு அவப்பெயா் ஏற்பட்டுள்ளது என்றாா். மேலும், கூட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளை அமல்படுத்துவது உள்ளிட்ட 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ராசிபுரம் நகா்மன்றக் கூட்டத்தில் பேசுகிறாா் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா்.