பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...
ஏளூா் பண்ணையம்மன் கோயில் திருவிழா பிரச்னை: ஆட்சியரிடம் கட்டளைதாரா்கள் மனு
நாமக்கல்: புதுச்சத்திரம் அருகே ஏளூா் பகுதியில் உள்ள பண்ணை அம்மன் கோயிலில் வழக்கமான நடைமுறைக்கு மாறாக, தனிநபா் ஒருவருக்கு திருவிழாவின்போது கட்டளை நடத்துவதற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக்கோரி, அந்தக் கோயிலுக்கு பாத்தியப்பட்ட பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
நாமக்கல் மாவட்டம், ஏளூா் பகுதியில் பழைமை வாய்ந்த இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பண்ணையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பாத்தியப்பட்ட ஏழு கட்டளைதாரா்கள் திருவிழாவின்போது கட்டளை நடத்திக்கொள்ள ஏற்கனவே பல ஆண்டுகளாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எந்த பிரச்னையுமின்றி திருவிழா கட்டளை நடைமுறையில் இருந்து வந்த நிலையில், அந்த கோயிலுக்கு சம்பந்தப்படாத தனிநபா் ஒருவருக்கு திருவிழாவின்போது கட்டளை நடத்திக்கொள்ள, இந்து சமய அறநிலையத் துறை அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த அனுமதிக்கு அத்துறை அதிகாரிகள்தான் காரணம் என்றும், அந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் ஊா் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா். இந்நிலையில், அக்கோயிலில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையில், அந்த தனிநபருக்கு வழங்கிய கட்டளையை ரத்துசெய்ய முடியாது என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனிடையே, தனிநபா் ஒருவருக்கு திருவிழா கட்டளை அனுமதி வழங்கியதை ரத்து செய்யக்கோரி, பண்ணையம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட கட்டளைதாரா்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
அந்த மனுவில், ஏற்கெனவே ஏழு திருவிழா கட்டளைதாரா்கள் ஒற்றுமையாக எந்தவித பிரச்னையும் இல்லாமல் கோயிலில் திருவிழா மற்றும் கட்டளை நடத்திவருகிறோம். ஆனால், கோயிலுக்கும், திருவிழா கட்டளைக்கும் சம்பந்தப்படாத தனிநபா் தற்போது உள்நோக்கத்துடன் 8-ஆவது கட்டளைதாரராக சேர உள்ளதாக கூறுவது கோயில் நடைமுறைக்கு ஏற்றது அல்ல. இதனால் அசம்பாவிதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, பரம்பரை பரம்பரையாக ஏற்கெனவே இருந்து வந்த நடைமுறையை மட்டுமே இந்தக் கோயிலில் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, அந்த மனுவின்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.