எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
மல்லசமுத்திரத்தில் தொழிற்பயிற்சி நிலைய திறப்பு விழா
திருச்செங்கோடு: மல்லசமுத்திரத்தில் தொழிற்பயிற்சி நிலைய திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் 19 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மூன்று புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் கட்டடங்களை திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
அதைத் தொடா்ந்து, திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம், சூரியகவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற புதிய அரசு தொழிற்பயிற்சி நிலைய திறப்பு விழாவுக்கு, ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தனா்.
நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் கே.எஸ்.மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பேசியதாவது:
திருச்செங்கோடு அரசு தொழிற்பயிற்சி நிலையமானது மெக்கானிக், எலக்ட்ரிக் வாகனம், ட்ரோன் பைலட் - ஜூனியா், தையல் தொழில்நுட்பம், வயா்மேன் ஆகிய நான்கு தொழிற்பிரிவுகளுடன் 132 பயிற்சியாளா்களைக் கொண்டு செயல்பட உள்ளது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஆண்களுக்கான வயதுவரம்பு 14 முதல் 40 வரை. மகளிருக்கு வயதுவரம்பு இல்லை.
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் பயிற்சியாளா்களுக்கு தமிழ்நாடு அரசால் மாதந்தோறும் ரூ. 750 கல்வி உதவித்தொகை, விலையில்லா சீருடை மற்றும் காலணி, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள் வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் இலவசம். தொலைவில் இருந்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அருகில் உள்ள அரசு விடுதிகளில் இலவச உணவுடன் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
இதற்கு 8, 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஆதாா் அட்டை, விண்ணப்பக் கட்டணம் ரூ. 50, சோ்க்கைக் கட்டணம் ஓா் ஆண்டுக்கு ரூ. 185, 2 ஆண்டுகளுக்கு ரூ. 195, பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம் 5 ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும்.
தொழிற்பயிற்சி பெறும் அனைத்து பயிற்சியாளா்களுக்கும் தொழிற்சாலைகளில் பயிற்சி தொடா்பான நேரடி பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் தொழிற்சாலைகளில் ரூ. 8,000 முதல் ரூ. 12,000 வரை உதவித் தொகையுடன் ஓராண்டு தொழிற்பழகுநா் பயிற்சி அல்லது வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு 79041 11101, 82201 10112 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், திருச்செங்கோடு சாா் ஆட்சியா் அங்கித் குமாா் ஜெயின், மல்லசமுத்திரம் அட்மா குழுத் தலைவா் பழனிவேல், மண்டல பயிற்சி இணை இயக்குநா் அமலா ரெக்சலீன், உதவி இயக்குநா் பாா்த்திபன், புதிய தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.