`ரூ.1,200 கோடி முறைகேடு; எலும்புகள் வைத்து பில்லி சூனியம்'- மும்பை மருத்துவமனையில் அதிர்ச்சி புகார்!
மும்பை பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனை மிகவும் பிரபலம் ஆகும். சமீபத்தில் நடிகர் சைஃப் அலிகான் அவரது வீட்டில் திருடனால் தாக்கப்பட்டபோது இந்த மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுத்துக்கொண்டார். தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்படும் இம்மருத்துவமனையில் ரூ.1200 கோடி அளவுக்கு நிதி முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்திய கோர்ட் தீர்ப்பையடுத்து ஏற்கெனவே இருந்த அறங்காவலர்கள் நீக்கப்பட்டு புதிய அறங்காவலர்கள் மருத்துவனையின் பொறுப்பை ஏற்றுள்ளனர். அவர்கள் பொறுப்பை ஏற்றவுடன் நிதி நிலையை ஆய்வு செய்தபோது மருத்துவமனையில் நிதி மோசடியில் ஈடுபட்டு இருப்பதை புதிய அறங்காவலர் குழு கண்டுபிடித்து இருக்கிறது. இது குறித்து மும்பை போலீஸார் மற்றும் அமலாக்கப் பிரிவிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறக்கட்டளையின் நிரந்தர உறுப்பினர் பிரசாந்த் மேத்தா கூறுகையில், ''முன்னாள் அறங்காவலர்கள் மற்றும் மருத்துவமனையோடு தொடர்புடையவர்கள் மீது ஏற்கெனவே மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்காவது புகாரும் பாந்த்ரா போலீஸில் கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வில் பெரிய அளவில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் நிதி நோயாளிகளுக்கு சென்றடையவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், துபாய், பெல்ஜியத்தை சேர்ந்த அறங்காவலர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
மொத்தம் 1500 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளனர். பொருட்களை மருத்துவமனைக்கு வாங்கியது மற்றும் சொந்த தேவைக்கு பயன்படுத்தி மருத்துவமனை நிதியை கையாடல் செய்துள்ளனர்'' என்றார். முன்னாள் போலீஸ் கமிஷனரும், மருத்துவமனையின் நிர்வாக இயக்குநருமான பரம்பீர் சிங் இது குறித்து கூறுகையில், ''மருத்துவமனையில் அறங்காவலர்கள் அறைக்கு கீழே பில்லிசூனியம் வைக்கப்பட்டு இருப்பதாக சில ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சாட்சிகள் முன்னிலையில் அலுவலக அறை தோண்டப்பட்டதில் உள்ளே 8 மண் கலசங்கள், மனித எலும்பு, முடி, அரிசி போன்ற பொருள்கள் இருந்ததன. அறங்காவலர்கள் அறையில் பழைய அறங்காவலர்கள் பில்லி சூனியம் வைத்துள்ளனர். இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் புகாரை பதிவு செய்ய மறுக்கின்றனர். இதனால் இது தொடர்பாக கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.