`ரூ.280 கோடி மதிப்புள்ள 39 சிலைகள்; வெளிநாட்டிலிருந்து மீட்க வேண்டும்' - பொன் மாணிக்கவேல்
தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பொன் மாணிக்கவேல். ஓய்வுக்குப் பிறகும் சாமி சிலைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து, வெளிநாட்டில் பாதுகாக்கப்படும் தமிழகத்தை சேர்ந்த தொன்மையான சிலைகளை மீட்க வலியுறுத்தி வருகிறார். இந்தநிலையில் தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் கோயில் மற்றும் சித்திரை சபையில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், "தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே பாப்பான்குளம் வாடா கலைநாயகி திருவெண்காடு சாமி கோவிலில் இருந்து 700 ஆண்டுகள் பழமையான வீணாதர தட்சிணாமூர்த்தி ஐம்பொன் சிலை 45 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோனது. அந்த சிலை, ஏற்கனவே சிலை கடத்தலில் 10 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற சுபாஷ் சந்திர கபூரின் சகோதரி சுஷ்மா ஷெரின் என்பவரிடம் உள்ளது. சிலை மதிப்பு ரூ.12 கோடியாகும்.
அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் சுஷ்மா ஷெரின், வீணை தட்சிணாமூர்த்தி சிலையை ஏலம்விட பட்டியலிட்டுள்ளார். அவரிடம் தமிழகத்தை சேர்ந்த ரூ.280 கோடி மதிப்பிலான 39 சிலைகள் உள்ளன. நமது தொன்மையான சாமி சிலையை மீட்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்கவேண்டும். அமெரிக்காவில் சுஷ்மா ஷெரின் நடத்த உள்ள ஏலத்தை தடுத்து நிறுத்தி சாமி சிலைகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும்" என கூறினார்.