செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராத...
ரூ.65 லட்சம் லேண்ட் ரோவர் கார் ரூ.8 லட்சத்துக்கு விற்பனை! புதிய வாகன கொள்கையால்..!
தில்லியில் புதியதாக அமல்படுத்தப்பட்டுள்ள வாகனக் கொள்கையால், தன்னுடைய ரூ. 65 லட்சம் மதிப்பிலான லேண்ட் ரோவர் காரை ரூ. 8 லட்சத்துக்கு விற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தில்லியில் ஏற்பட்டு அதிகளவிலான காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் 10 முதல் 15 ஆண்டுகள் மிகவும் பழைமையான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக் கூடாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவ்வாறான வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தனது அதிக விலை கொண்ட காரை கிடைத்த விலைக்கு விற்கும் முடிவை எடுத்துள்ளார் நிதின் கோயல்.
தில்லியைச் சேர்ந்த இவர் 2013 ஆம் ஆண்டு ரூ.65 லட்சத்துக்கு ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார் ஒன்றை வாங்கியிருந்தார். இதைத் தற்போது ரூ. 8 லட்சத்துக்கு ஹிமாச்சலைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டார்.
அதுமட்டுமின்றி, தன்னுடைய 10 ஆண்டுகள் பழமையான ரூ. 40 லட்சத்துக்கு வாங்கப்பட்ட மெர்சிடிஸ் சி கிளாஸ் 220 சிடிஐ ஸ்போர்ட்ஸ் லிமிடெட் எடிசன் காரையும் ரூ. 4 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார்.
பிஎஸ் 4 வாகனங்களை 2020 ஆம் ஆண்டு வரை தயாரித்துவிட்டு திடீரென தடை செய்வது எந்தவகையில் நியாயம் எனவும் நிதின் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், அவர் தற்போது ஜாக்குவார் எஃப் பேஸ் காரையும் வாங்கியிருக்கிறார்.
இவரைப் போலவே, தில்லியைச் சேர்ந்த வருண் விஜ் என்பவர் தனது ரூ.84 லட்சம் மதிப்புள்ள சொகுசு எஸ்யூவி காரான 2015 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல்350 காரை வெறும் ரூ.2.5 லட்சத்திற்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஜூலை 1 ஆம் தேதி எரிபொருள் தடை அமலுக்கு வந்த பிறகு, 10-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மீட்க, வாகனம் தில்லியில் இருந்து வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று பிரமாணப் பத்திரம் அளிக்க,10,000 அபராதம், வாகனத்தை பறிமுதல் செய்வதில் போக்குவரத்துத் துறையால் ஏற்படும் செலவுகளையும் வாகன உரிமையாளர் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.