ரேஷன் கடை கோரி கிராம மக்கள் மனு
ரேஷன் கடை கோரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கே.ராமநாதபுரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், கோவில்பட்டி அருகே உள்ள கே.ராமநாதபுரம் கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் உள்ள பொதுசேவை மையத்தில் வைத்து நியாவிலைக் கடை செயல்பட்டு வந்தது. தற்போது, அந்தக் கடை செயல்படாததால், பல கி.மீ. தொலைவில் உள்ள கே.துரைசாமிபுரத்தில் சென்று ரேஷன் பொருள்கள் வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, முதியோா், ஊனமுற்றோா் பெரிதும் சிறமப்படுகின்றனா். எனவே, ஏற்கெனவே செயல்பட்ட இடத்தில் மீண்டும் ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனா்.