லட்சுமி ராமகிருஷ்ணன் முதல் அமரன் நடிகர் வரை: குக் வித் கோமாளியில் பங்கேற்றுள்ள பிரபலங்கள்!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று(மே 4) வெகுவிமர்சையாக தொடங்கியுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் பங்கேற்றுள்ளார்கள் என்பதைக் காணலாம்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 6-வது சீசன் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு பெரியவர்கள், சிறியவர்கள் என பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் டிஆர்பியிலும் இந்நிகழ்ச்சி எப்போதும் முன்னணியில் உள்ளது.

நடுவர்களாக சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ், கெளசிக் ஆகியோர் பங்கேற்றுவுள்ளனர். தொடர்ந்து ஆறாவது சீசனாக ரக்ஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
கடந்த சீசன்களில் கோமாளிகளாக(சமையல் தெரியாதவர்) பங்கேற்ற புகழ், ராமர், சரத், சுனிதா, குரேஷி, தங்கதுரை இவர்களுடன் புதிய கோமாளிகளாக நடிகை செளந்தர்யா, பாடகர் பூவையார், யூடியூப் பிரபலம் சர்ஜின், நடன கலைஞர் டோலி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
குக் வித் கோமாளி ஆறாவது சீசனின் போட்டியாளராக(குக்குகளாக) இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை பிரியா ராமன், அமரன் படத்தில் நடித்த உமர் லத்தீப், செம்பருத்தி தொடர் நாயகி ஷபானா, விவசாயி நந்த குமார், நடிகை ஜாங்கிரி மதுமிதா, மெரீனா கடற்கரை சுந்தரி அக்கா, யூடியூப் பிரபலம் செளந்தர்யா சில்லுகுரி, பிக் பாஸ் பிரபலம் ராஜு, நடிகர் கஞ்சா கறுப்பு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த புதிய சீசனிலும் கோமாளிகளும் குக்குகளும் போட்டிப்போட்டுக்கொண்டு ரசிகர்களை மகிழ்வித்து வருவதால், இந்நிகழ்ச்சியில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் ராமர் இடையே முன்னதாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இந்த இணை அமைந்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிக்க: சின்ன திரை நட்சத்திர தம்பதிக்குப் பெண் குழந்தை!